திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய திமுகவினர் ஒரு மிகப்பெரிய சட்டப்போராட்டமே நடத்தினர். போராடி பெற்ற இந்த வெற்றி திமுகவினருக்கு என்றுமே மறக்க முடியாத ஒன்று. இதனையடுத்து கருணாநிதிக்கு மெரினாவை முதலில் மறுத்த அதிமுக அரசை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட தொண்டர்களுக்கு நன்றி கூறி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் அவர் அதிமுக அரசையும் அவர்கள் பின்னால் இருப்பவர்களையும் சாடியுள்ளார்.

மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் தலைவர் அவர்களுக்கு இடம் ஒதுக்கக்கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தோம். நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், வஞ்சக அதிமுக அரசின் காழ்ப்புணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தனர்.

பேரறிஞர் அண்ணாவுக்கு நம் தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளோம். தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களுடன் இணையும் “இறுதிப் பரிசை” நீதியரசர்களே வழங்கியிருக்கிறார்கள்.

அதற்காக அவர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளை திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும், நீதிமன்றத்தில் போராடிய கழக சட்டத்துறையினருக்கும், குறிப்பாக உயர்நீதிமன்ற அமர்வில் அழுத்த திருத்தமான வாதங்களை வைத்து நீதி கிடைக்க செய்த கழக சட்டதிட்ட திருத்த குழு செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த நன்றி கடிதத்தில் அதிமுகவை விளாசியுள்ளார் மு.க.ஸ்டாலின்.