திமுக தலைவர் கருணாநிதி இறந்த போது அவரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என முரண்டு பிடித்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்று மெரினாவில் இடத்தை பெற்றனர் திமுகவினர். இது குறித்து தற்போது நடந்து வரும் திமுக செயற்குழுக் கூட்டத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் பக்கத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதே கருணாநிதியின் முடிவு. அதை நிறைவேற்ற முடியாத வகையில் தகவல்கள் அரசிடம் இருந்து கிடைத்தன.

பின்னர் நாங்கள் சென்று பார்த்தோம். மானம், கௌரவம், சுயமரியாதை எதுபோவதாக இருந்தாலும் பரவாயில்லையென்று முதலமைச்சரை சந்தித்தேன். விதிமுறைகளில் வாய்ப்பில்லை, சட்டரீதியான நடவடிக்கைக்கும் வாய்ப்பில்லை என மறுத்தார் முதலமைச்சர்.

கருணாநிதிக்காக மெரினாவின் இடம் வாங்க, முதலமைச்சரின் கைகளை பிடித்து கெஞ்சிக்கேட்டேன். கடைசியாக பார்ப்போம் என்றார் அவர். மீண்டும் மெரினாவில் இடம் கேட்டு துரைமுருகன் கடிதம் எழுதி கொண்டு போய் கொடுத்தார். ஆனால் 10 நிமிடங்களுக்குள் வந்துவிட்டார். பின்னர் தொலைக்காட்சியில் தலைமைச் செயலாளரின் அறிவிப்பு வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தோம்.

பின்னர் நீதிமன்றத்தை நாடி சாதகமான தீர்ப்பை பெற்றது வழக்கறிஞர் குழுவினர். அவர்களுக்கு தான் இந்த பெருமை சேரும். அன்று நமக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லையென்றால் கருணாநிதியின் உடலுக்கு பக்கத்தில் என்னை தான் புதைக்க வேண்டிய சூழல் வந்திருக்கும் என தெரிவித்தார்.