ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா தலைவரே: மு.க.ஸ்டாலின் கண்ணீர் கடிதம்!

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் மரணமடைந்தார். அவரது மரணம் சொல்லன்னா துயரத்தை கொடுத்திருக்கிறது திமுகவினருக்கு. இந்நிலையில் அவரது மரணம் தந்த வலியில் கண்ணீர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் திமுக செயல் தலைவரும், அவரது மகனுமான மு.க.ஸ்டாலின்.

அந்த கடிதத்தில், எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்லும் எனது ஆருயிர் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்? என் உணர்வில், ரத்தத்தில், சிந்தனையில், இதயத்தில் இரண்டறக் கலந்துவிட்ட தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்று நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்த தமிழ் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மன நிறைவினால் புறப்பட்டு விட்டீர்களா?

95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, ’நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்டி வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா? திருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்த நாளாம் சூன் 3 ஆம் நாள் நான் பேசும் போது, ‘உங்கள் சக்தியில் பாதியை தாருங்கள் என்றேன். அந்த சக்தியையும் பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாக பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன், தருவீர்களா தலைவரே!

அந்த கொடையோடு, இன்னும் நிறைவேராத உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் வென்று காட்டுவோம்! கோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து ஒரு வேண்டுகோள்…… ஒரே ஒரு முறை….

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு நூற்றாண்டு எங்களை இனமொழி உணர்வோடு இயங்க வைத்திடுமே!

“அப்பா அப்பா” என்பதைவிட, “தலைவரே தலைவரே” என நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒருமுறை, இப்போது ‘அப்பா’ என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே? கண்ணீருடன் மு.க.ஸ்டாலின் என தனது கைப்பட எழுதிய கடிதத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.