சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் காவல் துறை அதிகாரி ஒருவரை கடுமையாக விமர்சனம் செய்தார். முதலமைச்சர், நான் அடிப்பேன் என பயப்படுகிறார் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் கூட்டத்திடம், “நீ கொலை கூட பண்ணு, அதனை சொல்லிட்டு பண்ணு. ஒரு நியாய தர்மம் இருக்க வேண்டும். என் ஜாதிகாரன் மேல கைய வச்சா கைய கால உடைச்சிருவேன். நாங்க எல்லாம், தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கூட கொலை செய்யவும் தயங்க மாட்டோம்” என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாங்கம் காவல் நிலையத்தில் அவர்மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கருணாஸை தேடி வந்த 3 தனிப்படை காவல் துறையினர் இன்று விடியற்காலை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், காவல் நிலையத்துக்கு, அழைத்துச் சென்ற காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.