இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 80 ரூபாயை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது அதன் விலை. இதனால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மோடி அரசு வெளிநாடுகளில் மிகவும் குறைந்த விலைக்கு பெட்ரோலை விற்கிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜெவாலா, நாட்டின் பல்வேறு நகரங்களில் தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 78 முதல் 86 வரையிலும், டீசல் விலை ரூபாய் 70 முதல் 75 வரையிலும் உள்ளது. ஆனால், 15 வெளிநாடுகளுக்கு மோடி அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 34 என்ற குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா, இஸ்ரேல் உள்ளிட்ட 29 நாடுகளுக்கு மோடி அரசு ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 37 என்ற விலைக்கு விற்பனை செய்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் அவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்தது. ஆனால் மோடி அரசு அதனை ஏற்கவில்லை என குற்றம் சாட்டினார்.