ADMK Alliance : அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக இணையாதது பிரதமர் மோடிக்கு அதிருப்தியை கொடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என்பதில் அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் உறுதியாக இருந்தனர். எனவேதான், தேமுதிகவிடம் அதிமுக தரப்பிலிருந்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால், விஜயகாந்தை ஸ்டாலின் சந்தித்த பின் திமுக கூட்டணியில் இணைய தேமுதிக முயற்சி செய்தது. ஆனால், விஜயகாந்த் கேட்ட தொகுதியை திமுகவால் கொடுக்க முடியவில்லை. மேலும், திமுக தனது கூட்டணி பங்கீட்டை முடித்து விட்ட நிலையில், விஜயகாந்த் எப்படியும் அதிமுக கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்று காலை விஜயகாந்த் தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போதும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி இன்று சென்னை வரவிருந்த நிலையில், பியூஸ் கோயல் மற்றும் அதிமுக அமைச்சர்கள் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேமுதிக 4 தொகுதிகள் ஒதுக்குவதாகவும், அதில் 2 தொகுதிகள் தனித்தொகுதி எனவும் கூறப்பட்டதால், அதை சுதீஷ் ஏற்கவில்லை.

இன்று எப்படியும் அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்துவிடும் என பாஜக நம்பியிருந்தனர். அதன விளைவாகவே வண்டலூரில் மோடி கலந்து கொண்டும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தின் புகைப்படங்கள் வைக்கப்பட்டது. வழிநெடுகிலும் அதிமுக, பாஜக கொடியோடு தேமுதிக கொடிகளும் வைக்கப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்ததால் கடைசி நேரத்தில் தேமுதிக கொடிகளும், மேடையில் இருந்த விஜயகாந்தின் புகைப்படங்களும் அகற்றப்பட்டன.

இந்நிலையில், சென்னை வந்து இறங்கிய மோடியிடம் தேமுதிக இன்னும் கூட்டணியில் இணையவில்லை என தெரிவிக்கப்பட்டதாம். அதில், கடுப்பான மோடி ‘ வந்தால் பாருங்கள்.. இல்லையேல் விட்டு விடுங்கள்’ எனக்கூறிவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

ஏற்கனவே, திமுக கூட்டனி முடிந்து விட்டதால் எங்களிடம் தேமுதிகவிற்கு சீட் இல்லை என திமுக பொருளாலர் துரைமுருகன் கை விரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.