மதுரையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய எயிம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, மதுரை திருமங்கலத்திற்கு அருகில் உள்ள தோப்பூரில் அமைய உள்ள எயிம்ஸ் மருத்துவமனையால் தென் மாவட்டங்கள் மிகுந்த பயன் பெறும். இதன் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுவார் என்றார்.

சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ராணுவ தளவாட கண்காட்சியை திறந்து வைக்க மோடி வந்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் Go Back Modi வாசகத்துடன் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கறுப்பு பலூன்களும் பறக்கவிடப்பட்டது. பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சென்றமுறை வந்த பிரதமர் மோடி சாலை பயணங்களை பெரும்பாலும் தவிர்த்தார். அருகில் உள்ள பில்டிங்கிற்கு செல்ல சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு சாலை போடப்பட்டு அதில் பயணம் செய்தார்.

மேலும் Go Back Modi என்ற வாசகம் உலக அளவில் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. இந்நிலையில் மீண்டும் தமிழகம் வர உள்ள பிரதமர் மோடிக்கு சிறந்த முறையில் வரவேற்பு கிடைக்குமா அல்லது எதிர்ப்பு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.