அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற இரண்டாவது உலக இந்து மாநாட்டில் மற்ற மதத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிகாகோ நகரில் நடைபெற்ற இரண்டாவது உலக இந்து மாநாட்டில் கடந்த 7-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்துக்களுக்கு அடக்குமுறை எண்ணம் இல்லை. எங்களின் செல்வாக்குக்கு வெற்றியோ அல்லது குடியேற்றமோ காரணம் அல்ல. இந்து சமூகம் ஒரு குழுவாக இணைந்து செயல்படும்போதுதான் அது செழிப்படைய முடியும். சிங்கம் தனியாக இருந்தால் காட்டு நாய்கள் சேர்ந்து அதை அழித்துவிடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றார்.

இதில் அவர் மற்ற மதத்தினரை காட்டு நாய்கள் என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் குவிந்து வருகிறது. ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் ஒவைசி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் சவாந்த், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் என பலரும் மோகன் பகவத் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.