மலையாள நடிகர் மோகன்லாலை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் சில அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து பாஜகவின் கொள்கைகளை பொதுமக்களிடம் அஜித்தின் ரசிகர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்கிற ரீதியில் தமிழிசை சவுந்தரராஜன் கூற, உடனடியாக அஜித் ஒரு அறிக்கை விடுத்தார். அதில், நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலுக்கு வரும் எண்ணும் தனக்கு இல்லை என அஜித் கூறி பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்தார். எனவே, அஜித்தை பாஜக பக்கம் இழுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதையடுத்து, கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வளைக்க பாஜக திட்டமிட்டது. மோகன்லால் இதற்கு முன் பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருக்கிறார். அதேபோல், சமீபத்தில் அவருக்கு மத்திய அரசு சார்பில் பத்மபூஷன் விருதும் கொடுக்கப்பட்டது. எனவே, அவரை பாஜகவிற்கு இழுக்க முயற்சிகள் நடந்தது. கேரளாவில் மோகன்லாலை களம் இறக்கினால் பாஜக வலுப்பெறும் என பாஜக கணக்குப்போட்டது.

கேரள பாஜகவின் மூத்த தலைவர் ஓ. ராஜகோபால் “ பாஜவின் கருத்துகளும், மோகன்லாலின் கருத்துகளையும் ஒன்றாக உள்ளது. எனவே, அவரை திருவனந்தபுரம் தொகுதியில் நிறுத்த ஆசைப்படுகிறோம். அவருக்கு பிடிக்கவில்லை எனில் அவர் கேரளாவில் எந்த தொகுதியில் நிற்க ஆசைப்படுகிறாரோ அங்கு நிற்கட்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று அறிக்கை வெளியிட்ட மோகன்லால் “எந்த கட்சியிலும் இணையும் எண்ணமோ, தனிக்கட்சி தொடங்கும் எண்ணமோ எனக்கு இல்லை. பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன். எனக்கு பிடித்தமான சினிமாத்துறையிலேயே இருக்க விரும்புகிறேன். எனக்கு அரசியல் பாடம் சிறிதளவும் தெரியாது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, அஜித்தை தொடர்ந்து மோகன்லாலை இழுக்கும் முயற்சியிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.