நடிகை ஸ்ரீதேவி நடித்து சமீபத்தில் வெளியான பாலிவுட்  திகில் திரைப்படமான ‘மாம்’ ரஷ்யா, போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் வெளியாகிறது.
இந்தியாவில் ‘மாம்’ திரைப்படம் ஜூலை 7 ஆம் தேதி வெளியாகியது. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக என்னவெல்லாம் செய்வாள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு வெளியானது.

இந்திய சினிமாக்கள் ஹாலிவுட் படங்களுக்கு ஈடாக சர்வேதேச திரையரங்குகளில் வெளியிடப்படுவதும், மற்ற நாட்டவர்களால் வரவேற்கப்படுவதும் போக்குசமீப காலமாக வளர்ந்து வருகிறது. ‘பாகுபலி’ வெற்றி நாம் எல்லோரும் அறிந்ததே. அதன் வரிசையில் ‘மாம்’ திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் இன்டெர்நேஷ்னல் விநியோகிக்கிறது, ரஷ்யாவில் 21 திரைகளிலும், போலந்தில் 9 திரைகளிலும், செக் குடியரசில் 3 திரைகளிலும் இப்படம் வெளியாகிறது மேலும் இது அக்டோபர் மாதம் வெளியீடப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படம் ஸ்ரீதேவியின் 300 வது படம் என்பது குறிப்பிடத் தக்கது. சிறுவயது முதல் தற்போது வரை தனது நடிப்பால் அனைவர் மனதையும் கவர்ந்து  தனித்து விளங்கும் இவருக்கு இந்த சர்வதேச வெளியீடு மற்றுமொரு மணிமுடியாகவே கருதப்படுகிறது. எது எப்படியோ ‘மாம்’ திரைப்படம் சிறப்பாக ஓடி இந்திய சினிமா சர்வதேச அளவில் வெற்றிபெற்றால் மகிழ்ச்சி.