சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்பவர் தனது கள்ளக்காதலனை கரம்பிடிக்க தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து, கழுத்தை நெரித்துக்கொன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் நாகர்கோவிலில் கைதானார் அபிராமி என்பவர். அவரை உடனடியாக சென்னைக்கு அழைத்துச்சென்ற போலீசார் அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேற்று காலை சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அபிராமி அளித்த வாக்குமூலத்தில், 8 ஆண்டுகளுக்கு முன்னர் நான் விஜய் என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். குன்றத்தூர் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்த நாங்கள் அருகில் உள்ள பிரியாணி கடைக்குக் குடும்பத்தோடு சில மாதங்களுக்கு முன்னர் சென்றோம். அப்போது அங்கு பணியில் இருந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அடிக்கடி பிரியாணி வாங்கச் சென்றேன்.

இதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. இதனால் குடும்பத்தை விட்டு விலகி சுந்தரத்துடன் செல்ல முடிவெடுத்தேன். 10 நாட்களுக்கு முன்னர் கணவர் விஜயிடம் சண்டைபோட்டுவிட்டு சுந்தரத்தின் வீட்டில் சென்று தங்கினேன். விஜய்யோடு 8 ஆண்டு குடும்பம் நடத்தினாலும், என்னால் சுந்தரத்துடனான 2 மாதப் பழக்கத்தை விடமுடியவில்லை.

எனவே குழந்தைகளைக் கொன்றுவிட்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் நாம் இருக்கலாம் என சுந்தரம் கூறினார். அதற்கு ஒத்துக்கொண்ட நான், ஆகஸ்ட் 30-ஆம் தேதியில் இருந்தே, கணவர் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்ய திட்டமிட்டேன். அன்று இரவு 3 பேருக்கும் பாலில் விஷ மாத்திரை கலந்து கொடுத்தேன். ஆனால் மாத்திரையின் வீரியம் குறைவாக இருந்ததால் மறுநாள் காலையில் கணவர் விஜய்யும், மகன் அஜய்யும் எழுந்து விட்டனர்.

ஆனால் மகள் கார்னிகா எழும்பவில்லை. அவள் அன்றே உயிரிழந்திருப்பாள் என நினைக்கிறேன். அடுத்தநாள் வேலைக்கு சென்ற விஜய் அன்று இரவு வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்து மீண்டும் மகன் அஜய்க்கு வி‌ஷம் கலந்த பாலைக் கொடுத்தேன். அவன் மயங்கிய பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை வழக்கில் அபிராமி முதல் குற்றவாளியாகவும், சுந்தரம் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.