Home சற்றுமுன் நாச்சியார் விமர்சனம்

நாச்சியார் விமர்சனம்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் இயக்கிய நாச்சியார் திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்திய நிலையில் இன்று இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது. டிரைலரில் இருந்த பரபரப்பு படத்தில் இருந்ததா? என்பதை தற்போது பார்ப்போம்

மைனர் பெண் இவானாவை காதலிக்கும் ஜி.வி.பிரகாஷ், அவருடன் ஒரு கட்டத்தில் தப்பு செய்துவிடுகிறார். அதனால் சிறுவயதிலேயே இவானா கர்ப்பமாகிவிட, அறியாத சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக ஜிவி பிரகாஷ் கைது செய்யப்படுகிறார். இந்த நிலையில் இவானாவுக்கு பிறந்த குழந்தை ஜி.வி.பிரகாஷூக்கு பிறந்தது அல்ல என்பதை இந்த வழக்கை விசாரணை செய்து வரும் ஜோதிகா கண்டுபிடிக்கின்றார். அப்படியென்றால் உண்மையில் இவானா பெற்ற குழந்தைக்கு தந்தை யார்? அந்த சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய கயவனை ஜோதிகா என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை

சிங்கம் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்த சூர்யா போல் கர்ஜிக்காமல் அமைதியாக வசனம் பேசி அதே நேரத்தில் அழுத்தந்திருத்தமாக பேசி ஜோதிகா, ஒரு சரியான முரட்டு பெண் போலீஸ் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார். அதே நேரத்தில் உயரதிகாரியை போடி என்று சொல்வதும், டிரைவரை வாடா போடா என்று பேசுவதும் சகிக்க முடியாத கொடுமைகள். ஒரு முரட்டு பெண் போலீசாக இருந்தாலும் ஒரு பெண்ணாக, தாய்மை அடைந்த சிறுமியை காப்பாற்ற முயல்வதில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் ஜோதிகா

ஜி.வி.பிரகாஷ் முதல்முறையாக உருப்படியாக நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும். வழக்கம் போல் பாலாவின் அசிங்கமான ஹீரோவாக தோன்றினாலும், கிளைமாக்ஸ் காட்சியில் உருக வைக்கும் நடிப்பின் மூலம் பாராட்டுக்களை பெறுகிறார்

புதுமுகம் இவானா, தன்னை யார் கெடுத்தது என்றே தெரியாமல், அப்பாவி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார். இவருக்கு கோலிவுட்டில் நல்ல எதிர்காலம் உள்ளது. ராக்லைன் வெங்கடேஷ், ஜோதிகாவின் கணவர் கேரக்டர் உள்பட அனைவரின் நடிப்பும் சிறப்பு

பாலாவின் வழக்கமான கொடூர காட்சிகள் இருந்தாலும் இந்த படத்தில் கொஞ்சம் குறைவு என்பதால் பெண்கள் இந்த படத்தை தைரியமாக பார்க்கலாம். ஆனால் ஒரு அப்பாவி பெண்ணுக்கும் அனாதை இளைஞனுக்கும் போலீஸ் உயரதிகாரிகள் எல்லாம் பரிந்து பேசுவது நடைமுறையில் சாத்தியமில்லாமல் உள்ளது., பல காட்சிகள் நம்பும்படி இல்லாமல் செயற்கைத்தனமாக உள்ளது. பாலாவும் கமர்ஷியலுக்காக சமரசம் செய்து கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது

இசைஞானியின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஈஸ்வர் கேமிரா பளிச்சிடுகிறது. மொத்தத்தில் ஜோதிகா என்ற ஒற்றை கேரக்டர் படத்தினை தோளில் சுமந்து பார்க்க வைத்துவிடுகிறது.

ரேட்டிங்: 3/5