நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் காலா படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக நாடார் சங்கம் மற்றும் சென்னை நாடார் சங்கம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது.

வரும் வியாழன் கிழமை வெளியாக உள்ள ரஜினியின் காலா படத்துக்கு கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் தடைவிதிக்க கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லையை சேர்ந்த திரவியம் நாடாரின் மகன் காலா படத்திற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலா படத்தை தடை செய்யக் கோரி, சென்னை மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கங்கள் சார்பில் தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் நாடார், ரஜினிக்கும் எங்களுக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது. திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கிருந்த தமிழர்களுக்கு நன்மைகள் செய்த கூத்வாலா சேட் என்று அன்பாக அழைக்கப்பட்ட திரவியம் நாடாருடைய கதையைத் தான் காலா படமாக எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாடார் சமூகத்தை சேர்ந்த அவரை, வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவராகக் காட்டுவது தவறு. இது திட்டமிட்டு செய்யப்படும் இருட்டடிப்பு வேலை. ஒரு உண்மை விசயத்தை படமாக்கும் போது, அதனை திரித்துக் கூறாமல் அப்படியே கூற வேண்டும்.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தரை, தலித் சமூகத்தை சேர்ந்தவராக காட்டினால் அதனை நாங்கள் நிச்சயம் எதிர்ப்போம். அரசு தரப்பிலும், படக்குழு தரப்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். அப்படி இல்லாத பட்சத்தில் காலா படத்தை தியேட்டர்களில் ரிலீசாகவிட மாட்டோம் என தெரிவித்தார்.