நடிகர் கமல்ஹாசனை நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நக்மா இன்று சந்தித்து பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக தமிழக அரசுக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். முக்கியமாக, ஊழலுக்கு எதிராக அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

அனிதாவின் தற்கொலை செய்து கொண்ட போது கூட, அரசுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்  எனக் கூறினார். அதோடு, அரசியலுக்கு வருவது குறித்து நான் ஆலோசனை செய்து வருகிறேன் என வெளிப்படையாக பேட்டியும் அளித்தார். அதோடு, நிச்சயம் நான் காவி பக்கம் சாய மாட்டேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா இன்று, கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

ஆளும் அரசுக்கும், பாஜகவிற்கும் எதிராக அவர் பேசி வரும் சூழ்நிலையில், அவரை காங்கிரஸுக்கு இழுக்கும் முயற்சியாகவே இந்த சந்திப்பை பார்க்க முடிகிறது.