நடிகர் விஷால் ‘நியூஸ் ஜெ’ என்கிற புதிய செய்திச் சேனல் தொடக்கம் பற்றி கூறிய கருத்துக்கு அ.தி.மு.க நாளேடான ‘நமது அம்மா’ கண்டனம் தெரிவித்து உள்ளது.

 

நடிகர் விஷால் கடந்த 2017 டிசெம்பர் மாத்தில் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அரசியலுக்குள் நுழைந்தார்.ஆனால் அவரின் வேட்புமனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது.தன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அ.தி.மு.க வினர்களால் தான் என நேரடியாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் தற்போது ஆளும்கட்சி அ.தி.மு.க.வுக்கு சொந்தமாக ‘நியூஸ் ஜெ’ என்ற செய்தி சேனல் கடந்த வாரம் தொடங்கப்பட்டது.இது குறித்து நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து “மற்றுமொரு செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய பணம் செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019-ம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்” என்று அ.தி.மு.க.வைச் சராமாரியாக சீண்டினார்.

விஷால் கருத்துக்கு இன்று வெளியான அ.தி.மு.க நாளேடான நமது அம்மா கண்டனம் தெரிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

‘நியூஸ் ஜெ’ தமிழ்ச் செய்தி தொலைக்காட்சிக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிகிற வேளையில், ஒரு ‘வி‌ஷமப்பயல்’ மட்டும் வாழ்த்துக்கு பதிலாக வன்மத்தை கக்குகிறது. காசு ஏது என்று காழ்ப்புணர்ச்சி பேசுகிறது.இப்ப மட்டுமா?

“அந்த தோல்விப்பட நடிகர்” கணக்கு கேட்க வேண்டிய இடம், “63 லட்சம் ரூபாய் சொத்து கணக்கு காட்டிவிட்டு, தொலைக்காட்சி, பத்திரிகை நடத்துவதோடு, டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றியும், ஊரெங்கும் கூட்டம் நடத்துகிறேன் என்று மாதம் 10 கோடி ரூபாயை செலவு செய்யும் அந்த மாபியா தலைவனிடம் தானே.”தொலைக்காட்சி தொடங்க பணம் ஏது என்று டுவிட்டரிலே, பதிவு போட்டு தனது நமைச்சலை வெளிப்படுத்துவது வெட்கக்கேடல்லவா? நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 7 கோடி ரூபாயை காணோம்னு கோடம்பாக்கமே உன்னை கொலை வெறியில் தேடுகிறபோது, உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை.

இவ்வாறு நமது அம்மா நாளிதழ்ளில் நடிகர் விஷாலை கடுமையாக விமர்சித்துள்ளது.