அதிமுகவின் தினகரன் அணியில் இருந்து விலகி அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறிய நாஞ்சில் சம்பத் மீண்டும் தனது பழைய தலைவரான வைகோவுடன் இணைய உள்ளதாக பேசப்படுகிறது.

திமுகவில் இருந்து விலகி வைகோ மதிமுகவை ஆரம்பிக்கும் போது அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த நாஞ்சில் சம்பத், அந்த கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். ஆனால் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார் நாஞ்சில் சம்பத்.

அதிமுகவில் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தன்னுடைய அசாத்திய பேச்சால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற பேச்சாளராக அதிமுகவில் திகழ்ந்தார் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தினகரன் அணியில் இருந்த நாஞ்சில் சம்பத், கடந்த மார்ச் மாதம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தினகரன் ஆரம்பித்த நிலையில் அங்கிருந்து விலகினார்.

திராவிடமும், அண்ணாவும் அதில் இல்லாத காரணத்தால் அதிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத், அரசியலை விட்டே விலகுகிறேன் என்றும், இலக்கிய மேடைகளில் தன்னை பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி சென்னையில் நடந்த இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத்தும் வைகோவும் கைகுலுக்கி நலம் விசாரித்துக்கொண்டனர். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் வைகோவை பாராட்டி டுவீட் செய்துள்ளார்.

அதில், மக்கள் மன்றத்திலும் நீதி மன்றத்திலும் ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இப்பொழுது நீதிமன்றத்தின் வாசலிலும் அரசாங்கத்தின் தாழ்வாரங்களிலும் தவம் கிடக்கிறது வேதாந்தா நிர்வாகம். இப்பொழுது மூடி இருப்பது இடைக்கால ஏற்பாடு என்றார்.

மேலும் தனது மற்றொரு டுவீட்டில், இன்னொரு நாள் அது மூடப்படும் அப்போது ஸ்டெரிலைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள். குட்டிச்சுவர்கள் ஒருகாலமும் கோபுரம் ஆவதில்லை. குட்டை ஒருக்காலும் சமுத்திரம் ஆவதில்லை என பாராட்டியுள்ளார். வைகோவை நாஞ்சில் சம்பத் பாராட்டியுள்ள நிலையில், மீண்டும் மதிமுகவில் நாஞ்சில் சம்பத் சேரவுள்ளாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.