சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத் தினகரனிடம் இருந்து வெளியேறி தற்போது திவாகரன் கட்சியில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

மதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா அணியில் இருந்தார். தினகரனை கடவுள் ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளிய நாஞ்சில் சம்பத், தினகரன் கட்சி ஆரம்பித்ததும் அதில் திராவிடம் இல்லையென்று தினகரனுக்கு டாட்டா காட்டிவிட்டு கிளம்பினார்.

இதனையட்டுத்து நாஞ்சில் சம்பத் மீண்டும் வைகோவிடமே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது எதிர்பாராத திருப்பமாக சென்னையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நடத்திய பட்டிமன்றம் ஒன்றில் இன்று நடுவராகப் பங்கேற்றுப் பேசியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். திவாகரன் தினகரனுக்கு எதிராக அரசியல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டிமன்ற விழாவில் திவாகரனைப் புகழ்ந்து தள்ளிவிட்டாராம் நாஞ்சில் சம்பத். கூட்டத்துக்கு வரும்போதும், போகும்போதும் திவாகரன் கட்சிக் கொடி கட்டிய காரில்தான் பயணித்திருக்கிறார் நாஞ்சில் சம்பத். அண்ணாவும், திராவிடமும் திவாகரன் கட்சியில் மட்டும்தான் இருக்கிறது என்று பேச ஆரம்பித்திருக்கிறார் அவர். நேரடியாக இதுவரை பேச ஆரம்பிக்காத நாஞ்சில் சம்பத் விரைவில் திவாகரன் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.