மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைக்கும் நஸ்ரியா நசீம்

‘நேரம்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. உச்சத்தில் இருந்தபோதே மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு நடிப்பை விட்டு விலகினார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நஸ்ரியா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. கடைசியில் அது வெறும் வதந்தி என்று தெரிய வந்தது.

கர்ப்ப வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் இந்த சமயத்தில் நஸ்ரியா, மீண்டும் நடிக்க வரப்போவதாக செய்தி ஒன்று மலையாள திரையுலகில் பரவலாக பரவி வருகிறது. தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அஞ்சலி மேனன் இயக்கும் மலையாள படமொன்றில் நஸ்ரியா நசீம் நடிக்கப் போகிறாராம். இந்த படத்தில் பிரித்விராஜ் ஹீரேவாக நடிக்கிறாராம்.

நடிப்புக்கு முழுக்கு போட்டு சென்று திரும்பிய நயன்தாரா, ஜோதிகா ஆகியோர் இழந்த தங்களது மார்க்கெட்டுகளை மீண்டும் நிலைநிறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நஸ்ரியாவும் இடம்பிடிப்பார் என்று நம்பப்படுகிறது. நஸ்ரியா நடிக்கும் அந்த புதிய படம் தமிழிலும் டப் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.