பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு சில காட்சிகளை படமாக்க சமீபத்தில் ஹரி நெல்லை சென்றார். ‘சாமி முதல் பாகத்தில் திருநெல்வேலி அல்வாடா என்ற பாடல் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட நெல்லையின் அதே தெருவில் மீண்டும் ஒருசில காட்சிகளை படமாக்க ஹரி திட்டமிட்டிருந்தாகவும், ஆனால் இந்த 15 வருடங்களுக்கு முன்பு இருந்த அந்த தெரு தற்போது முற்றிலும் மாறிவிட்டதால் அவர் ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே வேறு வழியின்றி சென்னை வந்த ஹரி, 15 ஆண்டுகளுக்கு முன் நெல்லையின் அந்த தெரு எப்படி இருந்ததோ, அதேபோன்று செட் போட கலை இயக்குனரிடம் கூறியுள்ளாராம். அந்த செட்டில்தான் 20% படப்பிடிப்பை நடத்த ஹரி திட்டமிட்டுள்ளாராம்.

ஷிபுதமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரம், கீர்த்திசுரேஷ், பிரபு, பாபிசிம்ஹா, சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். பிரியன் ஒளிப்பதிவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ள இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.