ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள பாகுபலி 2 படம் காரணமாக, புதிய தமிழ் படங்கள் வெளியாவது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அதனால், அதன் இரண்டாம் பாகத்தின் மீது சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. எனவே, இந்தப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் சுமார் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. தமிழகத்தில் மட்டும் சுமார் 600 தியேட்டர்களில் இப்படம் வெளியாகியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள முக்கிய பல தியேட்டர்களில் இந்த படம் வெளியிடப்பட்டது.

நகரப்பகுதிகளிலும் இரண்டு அல்லது மூன்று தியேட்டர்களில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் பாகத்தை போலவே, இந்த படமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. எனவே, படம் வெளியாகி 3 நாளில் இந்த படம் இந்தியா முழுவதும் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் வெளியானதால், கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகவிருந்த தொண்டன், கொளஞ்சி, எய்தவன், ஆரம்பமே அட்டகாசம் உள்ளிட்ட சில படங்கள் இந்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாகுபலி வெளியான அனைத்து தியேட்டர்களிலும், கூட்டம் அதிகரித்து வருவதால், புதிய படங்களை திரையிட வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் முன்வரவில்லை. எனவே, தியேட்டர் கிடைக்காமல் புதிய தமிழ் படங்கள் தொடர்ந்து தள்ளி வைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.