மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து ஐந்து முறை நிராகரிக்கப்பட்டு, தற்போது ஆறாவது முறையாக ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே ஐந்து முறை இவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ஆறாவது முறையாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கோரியுள்ளார் நிர்மலா தேவி.

இதே வழக்கில் தொடர்புடைய உதவிப்பேராசிரியர் முருகனின் ஜாமீன் மனு வரும் 29-ஆம் தேதி விசாரிப்பதாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முருகன் மீது பாலியல் குற்றத்துக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் கேட்டுக் கொண்டதன் பேரில், நிர்மலா தேவியை குரல் ஒப்பீட்டுப் பரிசோதனைக்காக சென்னை அழைத்துச் செல்ல உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் தற்போது ஜாமீன் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.