அனிதா மரணம் ; வாய் திறக்காத நடிகர் விஜய் : பின்னணி என்ன?

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நடிகர் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்.

அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர்வர்களும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. 

அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சினிமாத் துறையை சேர்ந்த பெரும்பாலானோர் தங்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வேதனையும், கருத்தும் தெரிவித்தனர். ஆனால், நடிகர் விஜய் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார்.

மாணவர்கள் ஜல்லிகட்டு போராட்டத்தை நடத்திய போது அதை ஆதரித்து வீடியோ வெளியிட்டார். அதன் பின் ஒரு பெண் செய்தியாளர், சுறா படத்தை கிண்டலடித்து கூறிய கருத்திற்கு அவரின் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். இதில் விஜய் தலையிட வேண்டும் என அந்த செய்தியாளர் கோரிக்கை வைத்த பின், விஜய் ஒரு அறிக்கை மட்டும் வெளியிட்டார்.

ஆனால், அனிதா விவகாரத்தில் இதுவரை தனது டிவிட்டர் பக்கத்தில் கூட அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அரசியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால், அதை அவர் தவிர்த்து வருகிறார் என சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகிறது.