தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பெப்ஸி மற்றும் கோக் ஆகிய வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனைக்கு மீண்டும் தடை விதிக்கப்பட இருப்பதாக வணிகர் சங்க பேரவைத் தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இனி தமிழ்நாட்டில் அந்நிய குளிர்பானங்கள் விற்கப்படக்கூடாது என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். இதனை ஏற்ற தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை வெளிநாட்டு  குளிர்பானங்களான கோக் மற்றும் பெப்ஸி ஆகியவற்றின்  விற்பனைக்குத்  தமிழகத்தில் தடை விதித்தனர்.  இதனால் பெப்சி, கோக் விற்பனை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது.

பின்னர் அந்நிறுவனங்கள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம்  மீண்டும் தமிழகத்தில் குளிர்பானங்கள் விற்பனை தொடங்கியது. இப்போது மீண்டும் குளிர்பானங்கள் விற்பனைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரதினம் முதல் தமிழகத்தில் மீண்டும் பெப்ஸி கோக் ஆகிய பானங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட இருக்கிறது.

இதை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் நேற்று தெரிவித்தார். பெப்சி மற்றும் கோக்குக்குப் பதில் இளநீர், பதநீர் மற்றும் உள்ளூர் குளிர்பானங்களின் விற்பனை ஊக்குவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.