நாடாளுமன்ற தேர்தல் முடிவு இப்படித்தான் வரும்: தினகரன் அதிரடி!

மத்தியில் தற்போது நடைபெற்று வரும் மோடி தலைமையிலான பாஜக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. விரைவில் அதாவது 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு கட்சியும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க தொடங்கியுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை தனிப்பெரும்பான்மையுடன் அமைத்தது பாஜக. ஆனால் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையை அடைய முடியாது எனவே கூறப்படுகிறது. இதனால் தான் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து தான் எதிர்கொள்வோம் என்றார்.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இந்த சந்திப்பின் போது அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன், 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவில், காங்கிரஸாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றார். மேலும் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றால் அதில் அமமுக அமோக வெற்றி பெறும் என்றார் தினகரன்.