கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா, சத்யராஜ், சரத்குமார், சேரன், அருண்விஜய், விஜயகுமார், விவேக், ஸ்ரீப்ரியா ஆகியோர்களுக்கு நீலகிரி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு நடிகை ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் வெளியானது. இந்த செய்தியில் வேண்டுமென்றே பல அருவருக்கத்தக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. அந்த பத்திரிகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் சங்கம் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த கூட்டத்தில் மேற்படி எட்டு நடிகர்களும் பொங்கி எழுந்தனர். ஒரு நடிகர் உச்சகட்டமாக பத்திரிகையாளர்களை கெட்ட வார்த்தை ஒன்றால் திட்டினார். இந்த நிலையில் நடிகர்களின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களின் மனம் பாதிக்கும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் இருந்ததாக கூறி ரசாரியா என்பவர் நீலகிரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து பலமுறை சூர்யா உள்பட எட்டு நடிகர்களும் ஆஜராகாததால் அனைவருக்கும் இன்று நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.