உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தவுள்ள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், டிடி என்ற திவ்யதர்ஷினி மற்றும் விஜய் டிவி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்மாக பதிலளித்து வந்த கமல்ஹாசன், தமிழக அரசியல் குறித்த சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அவர் கூறியதாவது: தற்போதைய அரசியலைப் பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக் கூடாது. அரசியல் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்’ என்று கூறினார். யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்பது ரஜினியையும் சேர்த்து அவர் மறைமுகமாக கூறியதாகவே கருதப்படுகிறது.

மேலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியதில் எந்த தவறும் இல்லை என்று கூறிய கமல், தமிழ் உணர்வு உள்ளவர்கள் யாரும் முதல்வர் ஆகலாம் என்றும் கூறினார். எனவே ரஜினியின் கன்னடர் என்ற விமர்சனத்திற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கருதப்படுகிறது. மேலும் ரஜினி அரசியலுக்குள் வந்தால் அவரை ஆதரிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த கமல், அதற்கான பதிலை அறிவிக்கும் களம் இது கிடையாது. வேறொரு சந்திப்பில் அதற்கு பதில் கூறுகிறேன்’ என்று கூறினார்.