சூர்யாவை வைத்து அரசியல் படம் எடுக்கவில்லை: விக்னேஷ் சிவன்

‘போடா போடி’ ‘நானும் ரவுடிதான்’ படங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன், சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கார்த்திக், ரம்யா நம்பீசன், ஆனந்த்ராஜ், செந்தில், சுரேஷ் மேனன், தம்பி ராமையா, சரண்யா, கோவை சரளா, சத்யன், ஆர்.ஜே.பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை பார்த்து பலரும் இப்படம் அரசியல் படமாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் கூறும்போது, இப்போதிருக்கும் அரசியல் சூழலில் இந்த தலைப்பு அது மாதிரியான ஒரு எண்ணத்தை உருவாக்கியிருக்கும்னு நினைக்கிறேன். ‘எங்களுடைய தலைவர் அரசியலுக்கு வருகிறாரா?’ என்று சூர்யாவின் ரசிகர்களில் பலரும் எனக்கு போன் போட்டு கேட்டிருக்கிறார்கள்.

இது நிச்சமயமாக அரசியல் படம் கிடையாது. பக்காவான மாஸ் படமாக இருக்கும். குடும்பத்தோடு எல்லோரும் தியேட்டருக்கு வந்து சந்தோஷமாக பார்க்கும்படியான நல்ல பேமிலி எண்டர்டெயினரா இருக்கும் என்றார். மேலும், அவர் கூறும்போது, இப்படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறோம் என்றார்.