Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் எந்த பெண்ணையும் கடத்துவேன்: பாஜக எம்எல்ஏவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

எந்த பெண்ணையும் கடத்துவேன்: பாஜக எம்எல்ஏவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

இளைஞர்கள் விரும்பும் பெண்ணை பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும் அந்த பெண்ணை கடத்தி தங்களிடம் தருவேன் என சர்ச்சைக்குறிய விதத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ ராம் கடமுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பையின் புறநகரிலுள்ள காட்கோபூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பாஜகவை சேர்ந்த ராம் கடம் என்ற எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார். அப்போது, சில இளைஞர்கள் விரும்பிய பெண்கள் அவர்களை நிராகரித்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த விஷயத்தில் நான் உங்களுக்கு 100 சதவீதம் எந்த உதவியும் செய்ய தயார் என்றார்.

மேலும் அந்தப் பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணைக் கடத்திவந்து யார் காதலிக்கிறாரோ அவரிடம் தருகிறேன் எனவும் கூறிய பாஜக எம்எல்ஏ தன்னுடைய மொபைல் நம்பரை அந்த கூட்டத்தில் இருந்தவர்களுக்கு கொடுத்துள்ளார்.

பெண்களை கடத்த உள்ளதாக பாஜக எம்எல்ஏ இப்படி பகிரங்கமாக கூறியுள்ளது மஹாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்த எம்எல்ஏ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராம் கடமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு மாநில மற்றும் தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.