பழைய பாடலா புதிய பாடலா

மெளனப்படங்களாக ஆரம்பித்த திரைப்படங்கள் மெல்ல மெல்ல பேசும் படங்களாக மாறி வந்த காலகட்டம் 40களில் ஆரம்பித்தது என சொல்லலாம். சுதந்திரத்திற்காக சுதந்திரத்துக்கு முன்பு வந்த படங்களிலே தேசபக்தி நிரம்பி இருந்தது இவை அப்போது வந்த படங்களின் பாடல்களிலும் இடம்பெற்றன.

அந்தக்காலத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர்கள் தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர் இவர்கள் கத்தி எடுத்தோ குதிரை மீதேறியோ சண்டை போடவில்லை.ஆபத்தில் அலறும் கதாநாயகியை காப்பாற்ற ஆலமர விழுதை பிடித்து தொங்கி கொண்டே காப்பாற்றவில்லை.

இவர்கள் செய்ததுதான் என்ன பாடல்கள் பாடியது மட்டுமே இவர்கள் வேலை. அது, ஒண்ணா ரெண்டா ஒரு படத்தில் 48 பாடல்கள், இப்போ ஒரு பாடல் போட்டாலே சிலர் புகைப்பதற்காக வெளியே சென்று விடுகிறார்கள்.

இந்த 48 பாடல்களையும் இவர்கள் உட்கார்ந்து ரசித்து கேட்டார்கள் காரணம் இனிமை இருந்தது. அத்தோடு டிவியோ, மீடியாக்களோ அதிகம் இல்லாத நேரம் அது. பெரும்பாலும் வசதி படைத்தவர் வீட்டில் வானொலி பெட்டி இருக்கும் அவ்வளவே அதனால் பகல் எல்லாம் உழைக்கும் மக்கள் தியாகராஜபாகவதரின் பாடல்களை கேட்டு ரசித்தார்கள்.

ஏனென்றால் அதுதான் அப்போதைய மனதுக்கு இனிமை தரும் பொழுதுபோக்காக இருந்தது அந்த நேரத்தில் 48 என்ன 98 பாடல் போட்டாலும் ரசித்திருப்பார்கள். பகல் எல்லாம் உழைச்சிங்க இரவெல்லாம் ரசிச்சிங்க என்று இளையராஜா ஒரு பாட்டில் சொல்வார் அது போல அந்தக்காலத்தில் பகல் எல்லாம் உழைத்தமக்களுக்கு இசை ஒன்றே பிரதானமாய் இருந்திருக்கிறது.

பின்பு 50களுக்கு பிறகு இந்த நிலை கொஞ்சம் கொஞ்சம் மாறியது சிவாஜி ,எம்.ஜி.ஆர் காலம் வந்தது இவர்கள் வந்த பிறகு பாடலின் எண்ணிக்கை அதிரடியாக 48ல் இருந்து 7,8 என குறைந்தது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்கள் பலர் உள்ளே நுழைந்தனர் அவர்கள் படத்தின் ஒரு அங்கமே பாடல் அதுவே பிரதான முழு உறுப்பு அல்ல என்ற கோட்பாட்டின்படி, இயக்குனர் பாலச்சந்தர், நீலகண்டன், தாதா மிராஸி ,ஸ்ரீதர், பீம்சிங், பி.ஆர் பந்துலு, மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஏ.பி நாகராஜன், ஏசி திருலோகச்சந்தர் என பல ஜாம்பவான்கள் படத்தின் கதையை நன்கு புரியும்படி நல்ல திரைக்கதையாக்கி பாடல்களை குறைத்து படத்தை ஹிட்டாக்கி பாடல்களையும் நன்கு ஹிட் ஆக்க வைத்து படத்தை முழுமையாக வெற்றி பெற செய்தனர் 48,58 பாடல்கள் திரைப்படத்தில் வைக்கும் முறை 50களுக்கு பின் முழுமையாக முடிவுக்கு வந்தது என சொல்லலாம்.

இன்றும் 90 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் பாகவதரின் அசோக்குமார், திருநீலகண்டர், ஹரிதாஸ் போன்ற படங்களில் உள்ள 100க்கும் மேல் உள்ள பாடல்களுக்கு அடிமை இவர்கள் அந்தக்கால ரசிகர்கள்.

50களுக்கு பின் வந்த படங்களின் பாடல்களை பெரும்பாலும் ஆக்ரமித்தவர்கள் டி.எம்.எஸ், சுசிலா, பி.பி ஸ்ரீனிவாஸ், ஜிக்கி, திருச்சி லோகநாதன் போன்றவர்கள்.

இந்த நேரத்தில் ஜி.ராமநாதன், போன்ற இசையமைப்பாளர்கள் உச்சத்தில் இருந்தார்கள்

டிஎம் எஸ்சின் குரல் அதிகம் மக்களால் விரும்பப்பட்டது. சிவாஜிக்காக ஒரு மாதிரியும் எம்.ஜி,ஆருக்காக ஒரு மாதிரியும் ஒலிக்கும் இவரின் குரல் .எம்.ஜி,ஆரின் தத்துவப்பாடல்களுக்கு இன்றளவும் பலர் அடிமை என்றே சொல்லலாம்.

எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய பாடல்கள் பலவற்றை மிகவும் விரும்பி கேட்கும் அன்றைய 25 இன்றைய 65 ரசிகர்களுக்கு சாப்பாடு,தண்ணீர் எதுவும் வேண்டாம் இந்த பாடல்கள் மட்டுமே போதும் என்ற மனநிலையில் இருக்கும் பழைய ரசிகர்கள் அதிகம்.

அதே போல் சிவாஜியின் ஜனரஞ்சகமான தத்துவம் மற்றும் காதல் பாடல்கள் என வெறித்தனமாக கேட்கும் சிவாஜி ரசிகர்களும் அதிகம் உண்டு. ஜெமினியின் ரொமாண்டிக்கான காதல் பாடல்களை விரும்பும் ரசிகர்களும் அந்தக்காலத்தில் இருந்தனர்

இது போல் சந்திரபாபு இவர் நடிகர் மட்டுமல்ல டான்ஸ் ஆடுவதிலும் பாடல் பாடுவதிலும் வல்லவர் பாடலாசிரியர் கண்ணதாசன், இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் இவர்கள் இருவருடன் நெருங்கிய நட்புடையவர். இவர் படத்தில் சில பாடல்களை இவரே [சந்திரபாபுவே} பாடுவார்.  வெஸ்டர்ன் டான்ஸை தமிழ் சினிமாவில் அதிகம் செலுத்தி பாட்டுடன் கூடிய ஆட்டத்தை காட்டிய வகையில் மக்களை கவர்ந்தார் சந்திரபாபு.,புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை என இவரின் தத்துவப்பாடல்களும் அடங்கும்

60களில் தமிழ் சினிமாவின் இசை நன்கு வளர்ச்சியடைந்தது விஸ்வநாதன் ராமமூர்த்தி, கேவி.மகாதேவன், என பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் கோலோச்சினார்கள்.

இசையை மட்டுமே தனது மூச்சாக கொண்டு செயல்பட்டனர் எந்த இடத்தில் எந்த இசை இடம்பெற வேண்டும் எங்கு ஸ்வரம் இடம்பெற வேண்டும் என மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கு ஏற்ப இசையமைக்க தொடங்கினர்

பாசமலர்,பாதகாணிக்கை, பாகப்பிரிவினை என பீம்சிங் படங்கள், ஏ,பி நாகராஜனின் பக்தி படங்கள் மற்றும் சிவாஜி ,எம்.ஜி.ஆர், ஜெமினி படங்களில் மேற்கண்ட இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் ஹிட் ஆகாமல் இருந்ததில்லை.

பெரும்பாலான படங்களுக்கு கே.வி மகாதேவனும், விஸ்வநாதன் ராமமூர்த்தியுமே அதிகம் இசையமைத்தனர்.

இன்றும் இரவு நேரங்களில் உலகத்தின் தூக்கம் கலையாதோ என்ற ஒற்றை வார்த்தையில் ஆரம்பிக்கும் படகோட்டி படப்பாடலான தரைமேல் பிறக்க வைத்தாய் பாடலாகட்டும், பாசமலரில் இடம்பெற்ற மலர்ந்தும் மலராத என ஆரம்பிக்கும் அண்ணன் தங்கை பாடலாகட்டும் மனம் சரியில்லாத நேரங்களிலோ இரவு நேரங்களிலோ கேட்டால் உங்கள் உயிரை உருக்கும் வலிமை கொண்டது மனதுக்கு ஆறுதலாக அமைந்தது.

அண்ணனும் தம்பியும் பாடிக்கொள்ளும் பொன் ஒன்று கண்டேன் ,பெண் அங்கு இல்லை போன்ற இனிய பாடலாகட்டும், இயற்கை என்னும் இளையகன்னியாகட்டும்,

மாமாவுடன் போட்டி போடும் மாமா, மாப்ளே பாடல் ஆகட்டும், தூங்காதே தம்பி தூங்காதே, உழைத்து வாழ வேண்டும், நான் ஆணையிட்டால் போன்ற எம்.ஜி.ஆரின் தத்துவ பாடலாகட்டும், ஜெமினியின் பாட்டுப்பாடவா, ஓஹோ எந்தன் பேபி போன்ற ரொமாண்டிக் பாடலாகட்டும் இன்று வரை வெறித்தனமாக கேட்கும் ரசிகர்கள் பலர் உண்டு.

அந்த நேரங்களில் ஓரளவு இப்போ எல்லார் கையிலும் ஆண்ட்ராய்ட் போன் இருப்பது போல அனைவர் வீட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக ரேடியோ பெட்டி வர ஆரம்பித்தது. வேலை பார்க்கும் இடங்களில் பாடல்கள் இல்லாமல் பொழுது போக்கு இல்லை என்ற நிலை ஆனது. வீடுகளிலும் அப்படித்தான்.

உறவை, உரிமையை, தத்துவத்தை,காதலை என அனைத்தையும் சொல்லிவிட்டு சென்றுவிட்டன அன்றைய பாடல்கள்.எஸ்.பி.பி சொன்னது போல எம்.எஸ்.வி அய்யா போன்றோர் போட்டு சென்ற எச்சங்களைத்தான் நாம் இப்போது தொடர்கிறோம் என்றார் ஒரு விழாவில்.

இப்படியான 60கள் 70களின் இசை இருக்க 70களின் இறுதியில் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இளையராஜா அறிமுகமாக தமிழ் சினிமா இசை ஜெட் வேகமெடுத்து பறக்க ஆரம்பித்தது.

பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் ஆதரவுடன்  திரைத்துறைக்கு வந்த ராஜா இசையுலகத்துறையின் ராஜாவாக இன்றுவரை தொடர்கிறார்.

ராஜாவின் பாடல்கள் இன்றுவரை அடுத்த தலைமுறை ரசிகர்களை கூட வசியப்படுத்தி வைத்திருக்கிறது. ராஜாவின் இசை வெறும் பாடல்களோடு நின்றுவிடாமல் ஒரு படத்தின் கதைக்கும் காட்சிகளுக்கும் இப்படித்தான் இசை இருக்கவேண்டும் என காட்சிகளின் வீரியத்தை தனது பின்னணி இசைமூலம் நிரூபித்தார். பின்னணி இசையின் சக்கரவர்த்தி என்று தாராளமாக ராஜாவை கூறலாம்.

ஒரு பாடல் எந்த ராகத்தில் அமைய வேண்டுமோ அந்த ராகத்தை எடுத்துக்கொண்டு தனது வலிமையான இசைக்கோர்ப்பால் பாமரர்களும் கேட்கும்படி செய்தவர் ராஜா, ஏனென்றால் கர்நாடக சங்கீதம் பலரும் இன்று வரை அறிந்திருக்கவில்லை அப்படிப்பட்ட கர்நாடக சங்கீதத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை எளிமைப்படுத்தி எல்லோருக்கும் புரியும் வண்ணம் கொடுத்தவர் ராஜா. ராகங்களில் மிக கஷ்டமானது தோடி ராகம் அந்த ராகத்தில் மாற்றம் செய்வதும் கடினம் அப்படிப்பட்ட தோடி ராகத்தை எடுத்து கொண்டு கங்கைக்கரை மன்னனடி என்ற அற்புதமான பாடலை வருஷம் 16 படத்தில் இசைத்திருப்பார் இசைஞானி. கவிஞர் வாலி எழுதிய இப்பாடலை கேட்ட வாலி சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் தோடி ராகத்தை தோய்த்தெடுத்த மாமேதை ராஜா என புகழாரம் சூட்டியுள்ளார்.

ரஜினி, கமல் எண்பதுகளில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் ராஜாவின் வருகை அமைந்தது எண்பதுகளுக்கு பிறகு வந்த ரஜினி,கமல் படங்களில் பெரும்பாலும் ராஜாவின் இசையே அமைந்தது. எல்லா படத்தின் பாடல்களும் பெரும் ஹிட் ஆகின. ரஜினி 85லேயே நூறாவது படமான ராகவேந்திராவில் நடித்துவிட்டார், கமல் 80லேயே ராஜபார்வை என்ற தனது நூறாவது படத்தில் நடித்துவிட்டார் இவர்கள் இருவருடன் இணைந்து அநேகமான படங்களில் பணிபுரிந்த இசையமைப்பாளர் ராஜா ஒருவரேதான்.

ரஜினி நடித்த ப்ரியா படத்தின் பாடல்கள் முதல் முறையாக ஸ்டீரியோ போனிக் ரெக்கார்டிங் வடிவில் முதல் முறையாக வந்தது ,அதாவது இன்றைய துல்லிய டிஜிட்டல் இசையின் முன்னோடி என இதை கூறலாம்.

ப்ரியா படத்தின் பாடல்களை இப்போது கேட்டாலும் நல்லதொரு டிஜிட்டல் இசையாக அது இருக்கும். 78லேயே ப்ரியா படம் ஸ்டீரியோ போனிக் வந்துவிட்டாலும் அதற்கு பின் வந்த பல படங்களில் பழைய டைப் இசையே தொடர்ந்தது. இதற்கு  ஸ்டீரியோ போனிக் ரெக்கார்டிங்கிற்கு அதிகம் செலவு அந்த நேரத்தில் பிடித்திருக்கலாம் என்பதும் ஒரு காரணம்.

 

ஜானி படத்தில் இசைஞானி இசையமைத்த அற்புத பாடல்கள் இன்றுவரை ஸ்டீரியோ டைப்பில் இல்லாமல் மோனோ டைப்பில் இருப்பது எண்பதுகளின் இசைவெறியர்களின் வருத்தம். ப்ரியா படத்திற்கு பிறகே ஜானி வந்தது குறிப்பிடத்தக்கது.

பாடல்களை துல்லியமாக தருவதில் அந்த நேரத்தில் முன்னிலை வகித்தது எல்.பி ரெக்கார்டுகள் என சொல்லப்படும் க்ராமபோன் ரெக்கார்டுகள். ஒரு படத்திற்கு சென்று டைட்டில் பார்க்கும்போதே இப்படத்தின் பாடல்களை எக்கோ இசைத்தட்டுகளில் கேட்டு மகிழுங்கள் என யானைப்பட லோகோவோடு டைட்டில் வரும். இன்றுவரை இந்த எல்பி க்ராமபோன் ரெக்கார்டுகளை தேடித்திரிவோரும் பழைய க்ராமபோன் ப்ளேயரை பல ஆராய்ச்சிகள் செய்து வேலை பார்த்து அதிலேயே துல்லியமாக பாடல் கேட்கும் வெறிகொண்ட ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.

இன்றைய நவீன யுகத்தில் கூகுளை தட்டி இந்த பழைய க்ராமபோன் ப்ளேயர்கள் எல்பி ரெக்கார்டுகள் குறிப்பாக 60,70, 80களின் ரெக்கார்டுகளை குயிக்கரில் குயிக்காக தேடும் பல வெறிபிடித்த இசை ரசிகர்கள் இன்று வரை உண்டு. குறிப்பாக இளையராஜா இசையமைத்த பழைய எல்.பி ரெக்கார்டுகளை தேடி தேடி சேகரிக்கும் சில நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த நேரத்தில் டேப்ரெக்கார்டர் பயன்பாடு அதிகம் இருந்தது. ஒரு வெள்ளைத்தாளை எடுத்து நமக்கு பிடித்த 12 பாடல்கள் ஏ சைட் 6 பி சைட் 6 என 12 பாடல்களை எழுதி ரெக்கார்டிங் சென் டரில் கொடுத்து அந்த கடைக்காரர் ரெண்டு நாள்ல தருகிறேன் என்று சொல்லி அதை ஒரு வாரம் இழுத்து நம் கையில் தருவார். அந்த கேசட்டை நாம் கையில் வாங்கும் வரை ஒரே பரபரப்பு விறுவிறுப்பு நம்மிடம் இருக்கும் அந்த அளவுக்கு 80களின் பாடல்கள் பலரை அடிமைப்படுத்தி வைத்திருந்தன.

இளையராஜா என்றில்லை தேவேந்திரன், சங்கர் கணேஷ், மனோஜ் கியான், அம்சலேகா, எஸ்.ஏ ராஜ்குமார்,சந்திரபோஸ் போன்ற பலரும் இசையுலகில் எண்பதுகளில் வெற்றியை தொட்டவர்கள்தான். இருந்தாலும் எண்பதுகளில் இளையராஜாதான் பிஸி அவரது கால்ஷீட்டுக்காக கால்கடுக்க நின்றவர்கள் ஏராளம்

எண்பதுகளில் மோகன் நடித்து இருந்தால் படம் ஹிட் என்ற நிலையும் இருந்தது. மோகனின் படங்கள் எல்லாம் இசையை மட்டுமே மையப்படுத்தி வந்த கதைகளாக இருந்தன மோகன் பெரும்பாலும் புகழ்பெற்ற பாடகராகவே நடித்தார். இயக்குனர் ஆர் சுந்தர்ராஜனின் முதல் படமான மோகன் நடிப்பில் வந்த பயணங்கள் முடிவதில்லை அந்த காலத்திலேயே அதாவது எண்பதுகளிலேயே 400 நாட்கள் ஓடிய படம் இளையராஜா வைரமுத்து கூட்டணி இப்படத்தில் விளையாடி இருந்தது.

இளைய நிலா பொழிகிறது என வைரமுத்து எழுதிய சொற்சுவை நிறைந்த பாடல் இன்றுவரை ஹிட் ஆக இளையவர்களின் செல்போன்களில் ஒலித்து வருவதுதான் வெற்றி. தொடர்ந்து  வைரமுத்து இளையராஜா கூட்டணி இளமைக்காலங்கள் படத்திலும் வந்தது அதில் வந்த ஈரமான ரோஜாவே பாடல் மிக மென்மையான சோகப்பாடலாக அனைவரும் ரசிக்கும் வண்ணம் இன்று வரை அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

மோகன் நடித்த பெரும்பாலான படங்கள் பாடல்களுக்காகவே ஓடின மோகனை நடிக்க வைக்க வேண்டும் இளையராஜாவை இசையமைக்க வேண்டும் என அந்தக்காலகட்டத்தில் இவர்களின் தேதி கிடைக்காமல் திரிந்த தயாரிப்பாளர்கள் ஏராளம்.

மோகனின் பிஸியான படங்கள் எல்லாம் இசையை மையப்படுத்திய படங்களே அவரின் படங்கள் எல்லாம் வெள்ளிவிழா படங்கள்தான் ஒரு நடிகர் கதாநாயகனாக நடித்து ஒரு படம் அல்லது 2 படம்தான் வருடத்திற்க்கு இப்போதெல்லாம் வருகிறது.

ஆனால் மோகன் நடித்த படங்கள் 84ம் ஆண்டு மட்டும் 19 படங்கள் ஒரு வருடத்தில் ரிலீஸ் ஆகி இருக்கின்றன அந்த அளவு மோகனின் இசைப்படங்களுக்கு மவுசுஅதிகம் இருந்தது.

சென்னை பாம்குரோவ் ஓட்டலில் மோகன் தங்கியிருந்த ரூம் என்றே அடையாளப்படுத்தி இன்றுவரை ஊழியர்களால் காட்டப்படுவதுண்டு ஒரு அறையிலேயே மூன்றுவருடத்துக்கும் மேல் மோகன் தங்கி இருந்திருக்கிறார் அந்த அளவு அவர் பிஸி அவரின் இசைப்படங்கள் அந்த நேரத்தில் அதிரி புதிரி ஹிட்.

 

தனது குருநாதர் ஜி,கே வெங்கடேஷ் அவர்களை நடிக்க வைத்து தன் மற்றொரு குரு எம்.எஸ்.வி அவர்களுடன் இளையராஜா இணைந்து இசையமைத்த மெல்ல திறந்தது கதவு படத்தின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் பாடல்கள் ஆயின.

ஊருசனம், குழலூதும் கண்ணனுக்கு,தேடும் கண்பார்வை, சங்கீத மேகம், பாடு நிலாவே, மலையோரம் வீசும் காத்து உள்ளிட்ட மோகன் இளையராஜா கூட்டணி பாடல்கள் எல்லாம் மெஸ்மரிச ரகம்.

இளையராஜா இசை ராமராஜன் பாடல்கள் என ஒரு நிலை வந்தது ராமராஜன் நடிக்கும் எல்லா திரைப்படங்களிலும் இளையராஜா இசை இருந்தால் ஹிட் என்ற செண்டிமெண்ட் இருந்து வந்தது ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற மதுர மரிக்கொழுந்து வாசம் போல் எல்லாம் மீண்டும் ஒரு பாடல் வருமா என்பது சாத்தியமே இல்லாதது அப்படி சில மனதை விட்டு நீங்காத பாடல்களை ராமராஜனின் படங்களுக்கு கொடுத்தவர் இளையராஜா.

இவர்கள் கூட்டணியில் கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரை நடனா திரையரங்கில் 486 நாட்கள் ஓடி சாதனை படைத்தது அத்தனையும் பாடலுக்காக மட்டுமே.

இன்று வயதான நபர்களாக பலவித ரோல்கள் செய்துவரும் சத்யராஜ், பிரபு, கார்த்திக், விஜயகாந்த் போன்றோர்கள் படத்தின் கதைக்காக மட்டுமல்லாமல் படத்தின் பாடல்களுக்காகவும் புகழ்பெற்றவர்கள்.

மனோஜ் கியான் இசையில் எண்பதுகளில் வந்த சத்யராஜ் நடித்து வந்த தாய்நாடு திரைப்படம் பாடல்களுக்காகவே ஹிட் ஆன படம்.

ஆபாவாணனின் பல படங்களில் மனோஜ் கியானே இசையமைத்தனர் நல்ல ஹிட் பாடல்களை கொடுத்தனர் செந்தூரப்பூவே உழவன் மகன் ,இணைந்த கைகள் என எல்லாமே மியூசிக்கல் ஹிட்

அதே போல் இளையராஜா கால்சீட் சூழ்நிலை காரணமாக கிடைக்கவில்லை என்றால் ரஜினியின் படத்துக்கு சந்திரபோஸ், சங்கர்கணேஷ், அம்சலேகா போன்றோர் இசையமைத்து பாடல்களை ஹிட் ஆக்கினர் சந்திரபோஸின் மனிதன், விடுதலை,ராஜா சின்ன ரோஜா படங்களின் பாடல்கள் மிகப்பெரும் ஹிட், அதே போ, அம்சலேகா இசையமைத்த ரஜினியின் கொடிபறக்குது பாடல்களும் ஹிட், சங்கர் கணேஷ் ரஜினி கூட்டணியில் வந்த ஊர்க்காவலன் பாடல்களும் ஹிட்.

தொடர்ந்து பாரதிராஜாவின் படங்களுக்கு இசைத்த இளையராஜா சில பிரிவுகளால் பாரதிராஜாவின் வேதம் புதிது படத்தில் முதன் முறையாக பணியாற்றவில்லை. அதற்குபதில் தேவேந்திரன் இசையமைத்தார் தேவேந்திரனின் இசையும் வேதம் புதிது பாடல்களை வரலாறு காணாத வகையில் ஹிட் ஆக்கின.

கவிஞர் வாலி, பிறைசூடன், புலமைபித்தன், மேத்தா போன்ற மேதமைகளின் வரிகளும் அதை ராஜா இசைத்த விதமும் மிகவும் அருமையான எண்பதுகளின் தருணங்கள் ஆகும்.

எண்பதுகள் ,70களில் அனைத்து பாடல்களும் மிகப்பெரும் ஹிட் ஆனதற்கு இலங்கை வானொலியும் ஒரு காரணம். காரணமில்லாமல் மக்களால் புறக்கணிக்கப்பட்ட சில நல்ல பாடல்களை இலங்கை வானொலி திரும்ப திரும்ப ஒலிபரப்பு செய்ததன் மூலமே மிகப்பெரும் ஹிட்டாக்கியது.

அனைவரது கைகளிலும் தவழ்ந்த வானொலி பெட்டியில் குறிப்பாக இலங்கை வானொலியே பெரும்பாலான தமிழ்ப்பாடல்களை பலரிடம் கொண்டு சேர்த்து மீண்டும் அப்பாடல் காற்றலைகளில் தவழ்ந்து வராதா என ஏங்க வைத்தது.

எஸ்,பி.பி சித்ரா, ஜானகி, ஜெயச்சந்திரன்,மனோ,உமாரமணன், ஜென்ஸி, எஸ்.பி சைலஜா, பி.சுசீலா, தீபன் சக்கரவர்த்தி.கே.ஜே ஜேசுதாஸ்,மலேசியா வாசுதேவன் என பல தேர்ந்த பாடகர்களை வைத்து எண்பதுகளில் இளையராஜா என்றில்லாமல் பெரும்பாலும் இசையமைத்த இசையமைப்பாளர்கள் இவர்களை வைத்தே பாட வைத்தனர் இவர்கள் குரலின் வசீகரத்தால் அந்த பாடல்கள் இன்று வரை அனைவரின் காதுகளிலும் தேனாக போய் இனிக்கிறது. காலங்கள் மாறினாலும் தேனினும் இனிமையான இப்பாடல்களை ரசிகர்கள் விட்டுவிட தயாரில்லை. எப்படி பார்த்தாலும் இசையுலகின் பொற்காலம் என்று எண்பதுகளை சொன்னால் அது மிகையான விசயமல்ல.

92ல் ரஹ்மான் அறிமுகமானார் ரோஜா படத்தில் இவர் போட்ட பாடல்கள் பட்டி தொட்டி சிட்டியெங்கும் ஹிட் ஆக யார் இந்த இளைஞன் என பலரும் பரவலாக மக்கள் பேச ஆரம்பித்தனர் தொடர்ந்து மே மாதம் ,காதலன் என மியூசிக்கல் ஹிட் கொடுக்க அவரின் அந்தஸ்து டாப் கியரில் பறந்தது.

ஒரு கட்டத்தில் முன்னணி இயக்குனர்கள் ரஹ்மானை தேட இந்திய இசையமைப்பாளர்கள் அனைவரும் ரஹ்மானை தேட ரஹ்மானின் இசை அலை இந்தியா முழுவதும் அடித்தது. அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கார் அவார்டுகளை அள்ளிக்கொடுத்து ஹாலிவுட்டிலும் பிரபலமானார் ரஹ்மான்.

ரஹ்மானின் பாடல்களுக்கும் வெறித்தனம் மிகுந்த பல ரசிகர்கள் உண்டு அவரின் டூயட், மே மாதம் இந்தியன், காதலன் குறிப்பாக காதலன் படத்தில் அந்த நேரத்தில் இடம்பெற்ற ஊர்வசி ஊர்வசி, முக்காலா முக்காபுலா, சைதாப்பேட்டை ராணிப்பேட்டை பாடல்கள் மிகப்பெரும் ஹிட் ஆன பாடல்கள் இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுபவை.

இவரின் நறுமுகையே நறுமுகையே பாடல் மிகச்சிறந்த மெலடி என்று சொன்னால் மிகையாகாது.

ரஹ்மான் வந்த காலத்தில் வித்யாசாகர், சிற்பி,எஸ்.ஏ ராஜ்குமார் ஹாரிஸ் ஜெயராஜ், தேவா என பலரும் தங்கள் திறமைகளை தத்தம் வழியில் காண்பித்து வெற்றியடைந்தனர்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அதாவது கடந்த சில வருடங்களாக இளையதலைமுறை இசையமைப்பாளர்கள் பலர் இசை என்ற பெயரில் எதை எதையோ திணிப்பதாக தெரிகிறது.

படங்களின் பாடல்களுக்கு உயிரூட்டிய புல்லாங்குழலோ, வயலினோ, வீணையோ எதுவுமே இல்லாமல் கம்ப்யூட்டர் கம்போஸிங்குகளால் இனிமையான ஜீவன் இல்லாத பாடல்கள் என இனிமை நிறைந்த இசைப்பாடல்கள் வெகுவாக குறைந்து விட்டது என கூறலாம். மெலடிப்பாடல்கள் நிறைய வருகின்றன அதில் ஜீவனில்லை.

டி. இமான் இன்னும் யாரையாவது குறிப்பிடாமல் விட்டிருக்கலாம் டி இமான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ்,யுவன் போன்ற ஒரு சில இசையமைப்பாளர்கள் மட்டுமே திரை இசையில் ஜீவனோடு பாடல்கள் கொடுக்க முயல்வதாக தெரிகிறது.

சில யங்ஸ்டர்ஸ் இசையமைப்பாளர்கள் போட்டதெல்லாம் பாட்டுதான் என்ற ரீதியில் சில கம்போசிங்குகளை செய்து நம் மீது திணிக்க முயல்கிறார்கள் என்பதே உண்மை.

இன்றும் இரவு நேரத்து நிலவொளியில் உட்கார்ந்து பால் வண்ணம் பருவம் கண்டேன், மலர்ந்தும் மலராத, பாட்டுப்பாடவா, காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி , நிலவு தூங்கும் நேரம், பூங்காத்து திரும்புமா, மின்னலே நீ வந்ததேனடி,காலையில் தினமும் கண் விழித்தால் பாடல்களை கேட்கும்போது மனதில் இருந்த இனம்புரியாத பாரத்தை இறக்கி வைத்தது போல் இருக்கும். ஒரு மருத்துவருக்கு நிகரான நம் மனதை குணப்படுத்தும் பாடல்களை இவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இப்போதைய இசையின் தரம் மேம்பட்டு நிற்கிறது என்ன புண்ணியம். துல்லிய இசை என்ற ரீதியில் மேம்பட்டு வருகிறது. ஆனால் ஜீவனில்லாமல் கதறி துடித்து அழுகிறது தற்போதைய இசை.

இசையை ரசித்து கேட்டதெல்லாம் ஒரு காலம் இப்போதெல்லாம் ஆடியோ ரிலீஸ் பங்க்‌ஷனோடு அந்த இசை பங்ஷனாவதே இல்லை என்பதே உண்மை.