கடந்த 7-ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்டவாரியாக நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி வரும் 30-ஆம் தேதி சென்னையில் கலைஞருக்கு நினைவேந்தல் நடைபெற உள்ளது.

வரும் 30-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற தலைப்பில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இதில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் திமுக தலைவர் கலைஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்துகொள்கிறார். அதிமுகவுக்கு அழைப்பு வந்துள்ளதா, கலந்துகொள்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், இதுவரை எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தால் முதல்வரோடு ஆலோசித்து கலந்துகொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.