நடிகை ஓவியா நடித்துள்ள ’90 எம்.எல்.’ படத்தின் டிரெய்லரை பார்த்து பலரும் மோசமாக விமர்சித்து வருபவர்களுக்கு ஓவியா பதிலடி கொடுத்துள்ளார்.

அனிதா உதீப் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, சிம்பு இசையமைத்துள்ளார். தணிக்கைக் குழு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் படக்குழு அண்மையில் 90 எம் .எல்.டிரெய்லரை வெளியிட்டது.

இரட்டை அர்த்தம் நிறைந்த வசனங்கள், முத்தக்காட்சிகள் , படுக்கை அறை காட்சிகள் இந்த டிரெய்லரில் அதிகமாக இடம்பெற்றுள்ளது. இந்த டிரெய்லரை பார்த்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கடுமையாக விமர்சித்தார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு வருத்தமாகவும், கோபமாகவும் உள்ளது, பணத்துக்காக இதுபோல் இளைஞர்கள் இச்சை உணர்வைத் தூண்டும் படங்களை எடுக்கின்றனர். இதுபோன்ற மோசமான படங்கள் ஒழிய வேண்டும். இந்த டிரைலரை பார்த்து, நான் மிகவும் வருத்தமடைகிறேன்” என பதிவு செய்துள்ளார்.

இதுபோன்று பலரும் 90 ml படத்தை மோசமாக விமர்சனம் செய்ய, கொதித்து போய்விட்டார் நடிகை ஓவியா, “பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப் படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். டிரெய்லரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்” என்று ஓவியா பதிலளித்துள்ளார்.