கடந்த 2015ஆம் ஆண்டு ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற சரித்திர படத்தை அளித்த அதே சஞ்சய்லீலா பன்சாலி இந்த முறை ‘பத்மாவத்’ படத்தை அளித்துள்ளார். பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் வெளிவந்திருக்கும் இந்த படம் ரசிகர்களை கவருமா? என்பதை பார்ப்போம்

ராஜபுத்திர அரசனான ரத்தன்சிங் (ஷாஹித் கபூர்), பத்மாவதியின் (தீபிகா) நாட்டிற்கு விருந்தாளியாக வருகிறார். வந்த இடத்தில் தீபிகாவிடம் மனதை பறிகொடுக்கும் அரசர் அவரை திருமணம் செய்து கொண்டு தனது நாட்டிற்கு அழைத்து சென்று அரசியாக்குகிறார்.

இந்த நிலையில் தனது ராஜகுருவே தனக்கு துரோகம் செய்ததை கண்டு பொங்கி எழும் ரத்தன் சிங் அவரை நாடு கடத்துகிறார். பார்க்கும் பெண்கள் அனைவரின் மீதும் மோகம் கொள்ளும் டெல்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியிடம் செல்லும் ராஜகுரு, பத்மாவதி ஒரு பேரழகி என்றும் அவரை நீ அடைந்தால் இந்த உலகமே உன் வசப்படும் என்றும் மோகத்தீயை ஏற்றுகிறார்

இதனால் பத்மாவதி மீது கற்பனையில் காமுறும் அலாவுதீன், அவரை அடைய அந்நாட்டின் மீது போர் தொடுக்கின்றார். போரில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், நயவஞ்சகமாக அரசன் ரத்தனை சிறைபிடித்து டெல்லிக்கு அழைத்து வருகிறார். பத்மாவதி நேரடியாக வந்தால் ரத்தன் சிங் விடுதலை செய்யப்படுவதாக அலாவுதீன் நிபந்தனை விதிக்க அதன்பின்னர் கணவரை காப்பாற்ற பத்மாவதி எடுக்கும் அதிரடி முடிவுகள் தான் படத்தின் மீதிக்கதை

பத்மாவதி கேரக்டரில் நடித்திருக்கும் தீபிகாவுக்கு ஆஸ்கார் விருது கொடுத்தால் கூட தகும். குறைவான வசனம் பேசினாலும் அவரது முகத்தில் ஆயிரம் நடிப்பு. குறிப்பாக அவரது கண்களின் நடிப்பை காண கண்கோடி வேண்டும்

அலாவுதீன் கில்ஜியாக நடித்திருக்கும் ரன்வீர்சிங் நடிப்பில் கலக்கியுள்ளார். பத்மாவதியை அடைவதற்காக அவர் செய்யும் கொடூர முயற்சிகள் பயங்கரமானவை.

ராஜபுத்திர அரசராக கம்பீரமாக அதே நேரத்தில் ஆழ்ந்த அமைதியான, வீரமான, காதலான என பலவகை நடிப்பை ஷாஹித் கபூரிடம் இருந்து வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் சஞ்சய்லீலா

பிரமாண்டமான ஒளிப்பதிவு, நேர்த்தியான படத்தொகுப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, அதிர வைக்கும் பின்னணி இசை, ஆச்சரியம் அளிக்கும் 3D டெக்னாலஜி, ஆகியவை படத்தின் பலம். இருப்பினும் போர் காட்சிகள் பாகுபலி அளவுக்கு இல்லை என்பது ஒரு குறை.

மொத்தத்தில் பத்மாவதி பார்க்க வேண்டிய படம்

4.5/5