பள்ளி பருவத்திலே என்று டைட்டில் மட்டும்தான் வைத்திருக்கின்றார் என்று நம்பிக்கை வைத்து படத்திற்கு போனால் படத்தில் பணிபுரிந்த அனைவருமே ஸ்கூல் பசங்க படம் எடுப்பது மாதிரியே எடுத்துள்ளார். கொஞ்சம் ‘பசங்க’, கொஞ்சம் ‘சாட்டை’, கிளைமாக்ஸில் ‘காதல்’ என படம் முழுவதும் பல படங்களை ஞாபகப்படுத்துகிறது. ஒரே ஒரு காட்சி கூட படத்தில் சுவாரஸ்யமாக இல்லை என்பது பெரும் சோகம்

இந்த படத்தின் கதையை பற்றி கூற ஒன்றுமே இல்லை. பள்ளியில் படிக்கும் ஹீரோ நந்தனும், ஹீரோயின் வெண்பாவும் காதலிக்கின்றனர். வழக்கம் போல் காதலை மனதிற்குள் ஹீரோயின் பூட்டி வைக்க, ஹீரோ மட்டும் புரபோஸ் செய்கிறார். சொல்லி வைத்தால் போல் வெண்பாவின் தந்தையும் சித்தப்பாவும் ஹீரோவை மிரட்டிவிட்டு வெண்பாவுக்கு ஒரு அப்பாவி மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். அதன் பின்னர் படம் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை

ஹீரோ நந்தனுக்கு டான்ஸ், நடிப்பு ஆகியவை நன்றாக வருகிறது. ஆனால் இப்படி ஒரு டுபாக்கூர் கதையில் மாட்டிக்கொண்டதால் அவரது நடிப்பு விழலுக்கு இறைத்த நீர். வெண்பா கதையும் அப்படித்தான்

தம்பி ராமையா, கஞ்சா கருப்பு காமெடி கொடுமையிலும் கொடுமை. தம்பி ராமையா தயவுசெய்து பாணியை மாற்றுங்கள், அல்லது நடிப்பதை நிறுத்திவிடுங்கள். ஊர்வசியை கிட்டத்தட்ட படம் முழுவதும் பாதி பைத்தியமாக்கி கிளைமாக்ஸில் முழு பைத்தியமாக்கி உள்ளனர். படத்தின் ஒரே ஆறுதல் கே.எஸ்.ரவிகுமார். ஒரு நல்ல தலைமை ஆசிரியராக மனதில் நிற்கின்றார். பொன்வண்ணன் அவ்வப்போது வந்து ஹீரோவை மிரட்டுகிறார், ஆர்.கே.சுரேஷ் ஆரம்பம் முதல் இறுதி வரை உதார் விடுகிறார்

இயக்குனர் வாசுபாஸ்கர் இந்த படத்தை 20 வருடங்களுக்கு முன் இயக்கியிருக்க வேண்டும். இப்போதுள்ள டிரண்டுக்கு இந்த கதை எப்படி செட் ஆகும் என்று முடிவு செய்தார் என்றே தெரியவில்லை. அவர் இன்னும் ஒரிரு வருடங்கள் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு அடுத்த படத்தை இயக்குவது நல்லது.

இசை விஜய் நாராயணன், ஒரு பாடல் கூட தேறவில்லை, பின்னணி இசையும் பெரிதாக இல்லை. மொத்தத்தில் இந்த படமே ஒரு வேஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு எடுத்துள்ளார்கள். தயவுசெய்து இந்த படத்தை யாரும் திருட்டு டிவிடியில் கூட பார்க்க வேண்டாம்.