நரிக்குறவர் மகள் ஹரிணி காணாமல் போயிருந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இனத் தம்பதியான வெங்கடேசன்,காளியம்மாளின் மகள் ஹரிணி (2 வயது). இவர்கள் கடந்த மாதம் 15-ம் தேதி பாசி மணிகள் விற்க  சென்றபோது அணைக்கட்டு காவல் நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர். அப்போது யாரோ ஹரிணியை தூக்கி சென்றுவிட்டனர்.

எனவே, போலீசாரிடம் புகார் அளித்த ஹரிணியின் பெற்றோர் ஹரிணியை தீவிரமாக தேடி வந்தனர். ஹரிணி பற்றிய செய்திகளை ஊடகங்களும் வெளியிட்டன. சமூக வலைத்தளங்களிலும் ஹரிணியின் புகைப்படத்தை வெளியிட்டு தேடுதல் பணி நடந்தது.

இந்நிலையில்தான், லதா ரஜினிகாந்த் ஹரிணியை தேடும் பணியில் இறங்கினார். மும்பை ஜோகிந்தர் ரயில்நிலையம் பகுதியில் ஹரிணி இருப்பதாகவும், ஒரு சில நாட்களில் உங்கள் ஹரிணி உங்களிடம் வருவாள் என அவர் ஹரிணியின் தந்தையிடம் பேசும் ஆடியோவும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், ஹரிணியை மீட்ட போலீசார் இன்று அவளின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக திருப்போரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தனது நண்பருக்கு குழந்தை இல்லாததால் ஹரிணியை கடத்தியதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காணாமல் போன ஹரிணி கிடைத்த விவகாரம் அவளின் பெற்றோரையும் தாண்டி பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.