நூற்றாண்டு கண்ட காவியத்தலைவனுக்கு இந்த நிலைமையா என விம்மும் அளவுக்கு தற்போது சில அரசியல் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தின் நிகரில்லா தலைவன் கலைஞர் கருணாநிதி. 95 வயதான அவரது உயிர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனையொட்டி அடுத்தடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் தமிழகத்தில் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த திராவிட தலைவருக்கு தலை சாய்க்க இடம் தர மறுக்கிறது சில ஆதிக்க சக்திகள். தமிழகத்தில் நடந்த அரசியல் விபத்தால் நாற்காலியை பிடித்த சிலர் ஐந்து முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் நாற்காலியை அலங்கரித்த சிங்காரத்தலைவருக்கு அவரது அண்ணனின் அருகில் உறங்க இடம் தர அடம் பிடிக்கிறது.

அண்ணனின் அருகில் தம்பியை கொண்டு சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அவரது சகாக்கள். கால் மிதிக்காத இடங்களுக்கு சென்றும், பேசாத நபர்களிடம் பேசியும் காரியம் மட்டும் சாதிக்க முடியாமல் மனம் விம்மி நிற்கின்றனர் உதயசூரியனின் தளபதிகள். இதற்கு பின்னணியில் சூரியணை நமஸ்காரம் செய்பவர்கள் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

14 வயதில் தொடங்கி 95 வயது கடந்தும் பொதுவாழ்க்கையில் 80 வருட சரித்திரம் படைத்த கலைஞருக்கு இந்த நிலைமையா என நினைக்கும் போது அவரது வார்த்தைகளே நினைவுக்கு வருகிறது. கண்கள் பனிக்கின்றன, இதயம் கனக்கிறது. நீ தலை சாய்க்க எங்கள் இதயம் இருக்கிறது எடுத்துக்கொள் என்ற கோடி உடன்பிறப்புகளின் குரல் கேட்கிறது. அதை யாராலும் தடுக்க முடியாது.