திருவாரூர் தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் சாதகமாக இருக்கிறது என திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் மறைவை அடுத்து திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், திமுக வேட்பாளராக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், டிடிவி தினகரனின் அமமுக சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினை கலைவாணன் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞருக்கு காணிக்கையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று பெறுவேன். அதிமுக எவ்வளவு பணம் கொடுத்தாலும் திருவாரூரில் கலைஞர் மீது மக்கள் வைத்திருக்கும் பாசத்தை விலைக்கு வாங்க முடியாது. அதிமுகம், அமமுக இரண்டையுமே நான் போட்டியாக கருதவில்லை ஏனெனில், இரு அணிகளும் ஒன்றாக இருக்கும் போது, அதுவும் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதுதானே கலைஞர் 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்” என அவர் பேட்டியளித்துள்ளார்.