பொதுநலன் கருதி பட இயக்குனருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நகைச்சுவை நடிகர் கருணாகரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கந்து வட்டி கொடுமையை மையமாக வைத்து சியோன் இயக்கிய படம் ‘பொதுநலன் கருதி’. இப்படத்தில் சந்தோஷ், அருண் ஆதிக், கருணாகரன் உள்ளிட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படம் கடந்த 7ம் தேதி வெளியானது.

இப்படத்தின் ஆடியோ விழாவில் பேசிய இயக்குனர் சியோன், படத்தின் புரமோஷனுக்கு கருணாகரன் வரவில்லை. டப்பிங் பேசும் முன்பே அவருக்கு முழு சம்பளத்தையும் கேட்டார். நாங்களும் கொடுத்துவிட்டோம். இப்படத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்கவில்லை. எனவே, மக்களுக்கு தெரிந்த முகமான கருணாகரன் படத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை என பேசியிருந்தார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சியோன் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கந்துவட்டிக்காரர்கள் போல் கருணாகரனும் மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சியோன் “இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் விஷால் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ஆகியோரிடம் முறையிட உள்ளேன்” என தெரிவித்தார்.