ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்கும் பிரணாப் முகர்ஜி: போர்க்கொடி தூக்கும் சொந்த மகள்!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்கு அவரது சொந்த மகள் உள்பட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கான பயிற்சி நிறைவு முகாம் இன்று நாக்பூரில் நடக்கிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேசவுள்ளார். ஆனால் பிரணாப் முகர்ஜி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கூடாது என நாடு முழுவதும் உள்ள பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் பிரணாப் முகர்ஜி தனது திட்டத்தை கைவிடாமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். நிச்சயம் இதில் கலந்துகொண்டு பேசுவேன் என தெரிவித்துள்ளார். இதற்காக நேற்றைய தினமே நாக்பூர் சென்றார் பிரணாப். அங்கு அவரது ஆர்எஸ்எஸ் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று மாலை நடைபெற உள்ள கூட்டத்தில் அவர் பேச உள்ளார். இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் மகளும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜி தனது தந்தைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்மிஸ்தா, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தவறான கதைகளை சொல்லும். அவர்களது கொள்கைகள் பிராணப் முகார்ஜி ஏற்றுக்கொண்டதாக பிரசாரம் செய்யும் என தெரிவித்துள்ளார்.