15 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கிய பிரசன்னா-சினேகா

கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள சில விவசாயிகளுக்கு நடிகர் பிரசன்னா-சினேகா தம்பதி நிதியுதவி அளித்துள்ளது.

வங்கிகளில் கடன்பட்டு, அதை அடைக்க முடியால் தமிழக விவசாயிகள் தவித்து வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் தலைநகர் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக விவசாயிகள் சிலருக்கு உதவ முன்வந்த நடிகர் பிரசன்னா-சினேகா தம்பதி, வங்கிகளில் கடன் பெற்று, அதை செலுத்த முடியாமல் தவிக்கும் 15 விவசாயிகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில், நேற்று இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது பேசிய பிரசன்னா-சினேகா தம்பதி “ விவசாயிகள் இல்லையெனில் நாம் இல்லை. பல்வேறு பிரச்சனைகளால் துயரப்படும் அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என தோன்றியது. அதற்காக 15 விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிதியுதவி செய்தோம். அவர்களுக்கு உதவ மற்றவர்களும் முன் வர வேண்டும்” என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.