நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பதிலளித்த தமிழக லஞ்ச ஒளிப்புத் துறை எடப்பாடி பழனிச்சாமி மீது பூர்வாங்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக முதலில் திமுக கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஆளுநரிடம் புகார் மனு அளித்திருந்தது. ஆனால் ஒருமாதம் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காததால், நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படது.

இந்த மனுவில் எடப்பாடி பழனிச்சாமி தனது உறவினருக்கு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை கூடுதல் தொகைக்கு எப்ப்டி கொடுத்திருக்கிறார் என தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவியையும், முதல்வர் பதவியையும் எடப்பாடி பழனிசாமி தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியின் 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் திமுகவினர் குறிப்பிட்டிருந்தனர்.

இதில் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், எடப்பாடி பழனிச்சாமி மீது பூர்வாங்க விசாரணை தொடங்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர். இதனையடுத்து விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து செப்டம்பர் 3-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.