Premalatha : தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தனர் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, திமுகவிடம் தேமுதிக ரகசிய பேரம் பேசியதை துரை முருகன் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். இது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதிமுகவுகும் அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேமுதிக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. குழப்பமும் இல்லை. இன்னும் ஒரிரு நாட்களில் தேமுதிக கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தனர். ஆனால், உள்ளே செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் இல்லை. வெளியே வரும் போது உள்ளனர். இதை, திட்டமிட்டு சதி செய்துள்ளனர். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி. சாதாரண விஷயத்தை சூழ்ச்சி செய்து இதை பூதாகரமாக்கி விட்டது.

திமுகவை பற்றி சுதீஷிடம் துரைமுருகன் கூறியது பற்றி விளக்கம் அளித்தால் நானும் விளக்கம் தருகிறேன். தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்தில் திமுக செயல்பட்டுள்ளது. துரை முருகன் உளறியிருக்கிறார். இவ்வளவு கீழ்தரமாக அவர் செயல்படுவார் என்பது இப்போதுதான் தெரிகிறது. யாரென்றே தெரியாது என்கிறார்.. யாரென்றே தெரியாதவரை எப்படி உள்ளே அவர் அனுமதித்தார்? கூட்டணி முடிந்து விட்டது என அறிவித்து விட்ட பின்பு, யாராவது கூட்டணி பற்றி பேசுவார்களா?என காட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.