முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்ட காலமாக உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி இருந்தது.

இந்த 7 பேரின் விடுதலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் இந்த கோரிக்கை மனுவை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் இந்த கோரிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கொள்கையோடு முரண்பட்டு இருப்பதால் இந்த விடுதலை தொடர்பான மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் சார்பில் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி கடிதம் எழுதப்பட்டிருந்தது. இருமுறையும் அந்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.