மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை இழிவாக மார்பிங் செய்த பாஜக உறுப்பினர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியங்கா சோப்ரா வித்யாசமான ஆடை மற்றும் தலை முடி அலங்காரத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அது கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் உருவாக்கியது. பலருடையப் புகைப்படங்களையும் அதுபோல மாற்றி சமூக வலைதளங்களில் உலாவ விட்டனர் நெட்டிசன்கள்.

அதுபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை இந்த புகைப்படத்தில் மார்ஃப் செய்து பாஜக தொண்டர் பிரியங்கா சர்மா என்பவர் சமூக வலைதளங்களில் பரப்பினார்.இதனால் இந்த விஷயம் அரசியல் விஸ்வரூபம் எடுத்தது.  இதற்கு எதிராக திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைத்தனர். அவரை நீதிமன்ற காவலில் 15 நாட்கள் வைக்க உத்தரவிடப்பட்டது. மேற்கு வங்கத்தில் நீதிமன்ற வேலை நிறுத்தம் நடைபெறுவதால் உச்சநீதிமன்றத்தை நாடினார் பிரியங்கா சர்மா.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ’ பிரியங்கா தன்னுடைய இழிவான செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவருடைய உரிமைகளை மீறாத வகையில் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த வேண்டும். ’ எனத் தெரிவித்துள்ளனர்.