வேட்டை நாய் படத்தில் ஹீரோவாக களம் இறங்கும் ஆர்.கே.சுரேஷ்..

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.கே.சுரேஷை, இயக்குனர் பாலா, தாரைப்பட்டை படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வைத்தார். அந்த வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது தனிமுகம், பில்லா பாண்டி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அப்புக்குட்டியை வைத்து ‘மன்னாரு’ படத்தை இயக்கிய எஸ்.ஜெய்சங்கர், சமீபத்தில் சுரேஷை சந்தித்து ஒரு கதையை சொல்ல முயன்றுள்ளார். அப்போது, தற்போது கால்ஷீட் இல்லை, ஆர்வம் இல்லை என பல்வேறு காரணங்கள் கூறி தவிர்க்க முயன்றுள்ளார். ஆனால், கதையை கேட்டு உங்கள் முடிவை சொல்லுங்கள் எனக் கூறி, அவரிடம் கதையை கூறியுள்ளார் ஜெய்சங்கர். முழுக்கதையையும் கேட்டவுடன், படப்பிடிப்பிற்கு எப்போது செல்லலாம் என ஆர்வமாக கேட்டாராம் சுரேஷ். அந்த அளவிற்கு அப்படத்தின் கதை அவரை ஈர்த்துள்ளதாம்.

இப்படத்திற்கு வேட்டை நாய் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சுரேஷின் தாய் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது. அவருக்கு ஜோடியாக கடுகு படத்தில் நடித்த சுபிஷா நடிக்க இருக்கிறார்.

மோசமான முரடனாக உள்ள ஒருவனின் வாழ்க்கையை, உலகமே தெரியாத, குழந்தைத்தனம் கொண்ட ஒரு பெண் எப்படி மாற்றுகிறார்கள். அவர்கள் இருவரும் என்னென்ன பிரச்சனையை சந்திக்கின்றனர் என்பதுதான் கதை. கொடைக்கானல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.