மும்பை தாதா ஹாஜி மஸ்தான் வேடத்தில் ரஜினி..?

இயக்குனர் ப.ரஞ்சித் அடுத்து ரஜினியை வைத்து இயக்கும் படம், மறைந்த மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றை பற்றியது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை இயக்கினார் ரஞ்சித். அது மலேசியாவில் வாழும் தமிழர்கள் பற்றிய கதையாகும். அதன் பின் ரஜினி தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பின், அதே ரஞ்சித் படத்தில் அவர் மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

இந்நிலையில், 1926-1994ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மும்பையில் பெரிய தாதாவாக வலம் வந்த மிர்ஜா ஹாஜி மஸ்தான் என்ற தமிழரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஹாஜி மஸ்தான் மிகப்பெரிய கடத்தல்காரராகவும், திரைப்படங்களுக்கு நிதியுதவி செய்பவராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் வலம் வந்தவர். எப்போதும் வெள்ளை நிற ஆடைகள் மற்றும் காலணிகளை அணிந்து, வெள்ளிநிற மெர்சிடிஸ் காரில், ஸ்டைலாக வலம் வருவார்.

இவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் ப.ரஞ்சித் சினிமாவாக எடுக்க இருக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், ஹாஜி மஸ்தானின் கதையை நாங்கள் எடுக்கவில்லை என ரஞ்சித் படக்குழு மறுத்துள்ளது.