தமிழகத்தில் சமீப காலமாக மக்கள் எழுச்சி போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்துக்கு தேவையான அனைத்தும் போராடியே வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கார்ப்பரேட்களையும், அரசையும் எதிர்த்துதான் தமிழகத்தில் போராட்டங்கள் அதிகமாக நடக்கின்றன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது, கூடங்குளம் அணு உலை, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், கெயில் எரிவாய்வு குழாய் பதிப்பு, நீட் தேர்வு, ஸ்டெர்லைட் என மக்கள் போராட்டங்கள் பலவற்றை தமிழகம் சமீப காலமாக பார்த்து வருகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் ஆட்சியில் இருப்பவர்கள் ஒற்றை வார்த்தையால் கொச்சைப்படுத்தி விடுகிறார்கள்.

மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தும் அந்த வார்த்தை, போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள். போராடும் மக்களை தீவிரவாதிகள் போன்று சித்தரிக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்தும் பேச ஆரம்பித்துள்ளது மக்கள் போராட்டங்களுக்கு ஆபத்தாக அமைந்துள்ளது. இனிவரும் போராட்டங்களை இந்த காரணத்தை சொல்லியே ஒடுக்குவார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சில தீவிரவாத குழுக்கள் புகுந்துவிட்டது என மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டசபையில் பேசினார் அப்போதையை முதல்வரும் தற்போதைய துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். ஸ்டெர்லைட் போராட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவி விட்டார்கள் என சட்டசபையில் பேசினார் தற்போதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

முன்னதாக, தமிழகத்தில் நடக்கும் அனைத்து போராட்டங்களிலும் தேச விரோதிகள் இருக்கிறார்கள் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் தீவிரவாதிகள் ஊடுருவி இருந்தார்கள் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும், தமிழகத்தில் ஒரு வருடமாக பயங்கரவாதிகள் செயல்பாடுகள் அதிகமாக இருக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் பேசியுள்ளனர்.

தற்போது இந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்தும் இணைந்து, ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு அவரது ரசிகர்களை விட முதலில் வந்து வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு தெரிவித்து வரவேற்பது அதிமுகவும், பாஜகவும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.