அரசியலில் இறங்கும் முன்பே அதிரடியை ஆரம்பித்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் உறுதி என்பது ரசிகர்கள் முன்னிலையில் அவர் பேச்சில் தெரிந்தது என்பது ஒருவகை என்றால் இதுவரை இல்லாத வகையில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் அதிரடியாக நீக்கப்பட்டது இன்னொரு வகையாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர் மன்றத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, தலைமை மன்ற நிர்வாகி திரு வி.,எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இதன்படி வி.எம்.சுதாகர் தற்போது சைதை ரவி என்ற முக்கிய நிர்வாகியை அதிரடியாக மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் அவருடன் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரஜினியின் அதிரடி நடவடிக்கை ஆரம்பித்துவிட்டதாகவும், அவர் முன்பே கூறியது போல் நான் அரசியலுக்கு வரும்போது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பவர்களை தவிர்த்துவிடுவேன்’ என்று கூறியிருந்ததை தற்போது செயலில் காட்டுவதாகவும் ரசிகர் மன்றத்தினர் தெரிவித்து வருகின்றனர்.