நடிகர் ரஜினிகாந்த், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, விடுதலை சிறுத்தை திருமாவளவன் ஆகியோர் திடீரென சந்தித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் வேளையில், சென்னை அண்ணாநகரில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டிற்கு இன்று காலை ரஜினி வந்தார். அப்போது அங்கு ஏற்கனவே திருமாவளவன் இருந்தார். மூவரின் சந்திப்பும் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. அதன்பின் ரஜினி கிளம்பி சென்றார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசு நீக்கப்பட்டுள்ளார். திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் தொகுதி பங்கீட்டில் திருப்தி இல்லாத நிலையில் திருமாவளவன் இருக்கிறார். எனவே, அவர்கள் இருவரையும் ரஜினி சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

ஆனால், தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்கவே ரஜினி வந்தார் எனவும், திருமாவளவனை சந்தித்தது எதேச்சையான ஒன்று எனவும் ரஜினி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், கண்டிப்பாக அரசியல் நிலவரம் குறித்து மூவரும் ஆலோசித்திருப்பார்கள் என கருதப்படுகிறது.