நதிகளை இணைப்போம் பாரதம் காப்போம் இயக்கம் சார்பில் இந்தியா முழுவதும் நதிகள் இணைப்புக்கான விழிப்புணர்ச்சி கூட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரியில் இருந்து இமய மலை வரை நதிகள் இணைப்பு விழிப்புணர்வு பேரணியும் நடத்தபடுகிறது. ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக பிரம்மாண்ட விழிப்புணர்வு பிரசாரக்கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்தும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவர் கலந்துகொள்ளவில்லை. அதற்கு பதிலாக இந்த நிகழ்ச்சி வாழ்த்துக் கூறும்விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் ரஜினிகாந்த்.

அதில், ரத்த நாளங்கள் இல்லை என்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் ரத்த நாளங்கள். அதை பாதுகாக்கவேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஜீவ நதிகளாக்க மதிப்புக்குரிய சத்குரு எடுக்கும் இந்த மாபெரும் முயற்சி வெற்றிப்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.