karthick subburaj

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தை கர்நாடகத்தில் வெளியிட விட மாட்டோம் என கன்னட அமைப்புகளும் கர்நாடக வர்த்தக சபையும் கூறியுள்ளது. கர்நாடக முதல்வர் குமாரசாமியும் காலாவுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளார்.

இதனால் காலாவுக்கு சிக்கல் எழுந்தது. இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் என ரஜினி அறிவித்தால், காலாவை திரையிட அனுமதிப்போம் என கர்நாடகத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. இந்நிலையில் காலாவுக்கு கர்நாடகாவில் உள்ள எதிர்ப்பை தனிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு. இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று தெரியவில்லை. அணைக்கட்டுகள் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கனும் என்பது எனது கருத்து. இதற்காக காலா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறுவது சரியில்லை.

காலா படத்தை வீம்புக்காக நாங்கள் கர்நாடகத்தில் ரிலீஸ் செய்ய முயலவில்லை. காலா திரைப்படும் நாளை உலகம் முழுவதும் வெளியாகும் போது அது கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை என்றால் ஏன் என்ற கேள்வி எழும். அது கர்நாடகாவிற்கே நல்லா இருக்காது என்றார். மேலும் காலா திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு அளிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

தொடர்ந்து கன்னடத்தில் பேசிய ரஜினிகாந்த், கன்னட சகோதரர்களே நான் எந்த தப்பும் செய்யவில்லை. படம் பார்க்க வரும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காதீங்க. படம் ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள் என்றார்.